கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது தொடர்பாக நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று (டிசம்பர் 8) தீர்ப்பளிக்கப்படுகிறது.
கேரளாவில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த நடிகை ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதுதான் அந்த சம்பவம். இது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் சிக்கினார். நடிகைக்கும் நடிகர் திலீப்புக்கும் நீண்டகால முன்விரோதம் இருந்ததும் போலீஸ் விசாரணையில் உறுதியானது.
இதனையடுத்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மொத்தம் 8 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. நீதிபதி ஹனி எம். வர்கீஸ் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறார்.
