டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீதான டெல்லி மதுபான கொள்கை வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பிப்ரவரி 27-ம் தேதி ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ உடனடியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, மார்ச் 9-ம் தேதி கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகக் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கும் தடை விதித்தார்.
கெஜ்ரிவாலின் வாதம்
இந்த வழக்கை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரிக்கக் கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். நேற்று (ஏப்ரல் 13) நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தனது தரப்பு வாதங்களை வழக்கறிஞர் இன்றி அவரே முன்வைத்தார். அப்போது, “நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா பதவியேற்ற பிறகு, ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தொடர்புடைய ‘அதிவக்தா பரிஷத்’ (Adhivakta Parishad) நடத்திய நான்கு விழாக்களில் பங்கேற்றுள்ளார். நான் அந்தச் சித்தாந்தத்திற்கு எதிரானவன். ஒரு அரசியல் வழக்கில், எதிர்ச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட ஒருவரிடம் எனக்கு நியாயம் கிடைக்குமா?
முந்தைய விசாரணைகளில் நீதிபதி வழங்கிய கருத்துக்கள் என்னை ஏற்கனவே குற்றவாளியாகச் சித்தரித்துவிட்டன. தண்டனை வழங்கப்படுவது மட்டும்தான் பாக்கி என்பது போன்ற சூழல் உள்ளது.
மேலும், நீதிபதியின் இரு மகன்களும் மத்திய அரசின் வழக்கறிஞர்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் வாதத்தைத் தொடர்ந்து, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கருத்தரங்குகளில் பங்கேற்பது ஒரு நீதிபதியின் நடுநிலைமையைப் பாதிக்காது. இதுபோன்று ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த நீதிபதியைத் தேர்வு செய்ய ஆரம்பித்தால், அது நீதித்துறைக்குத் தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்று வாதிட்டார்.
தீர்ப்பு நிறுத்திவைப்பு:
விசாரணையின் இறுதியில்கெஜ்ரிவாலின் வாதத் திறமையைப் பாராட்டிய நீதிபதி, “நீங்கள் நன்றாக வாதிடுகிறீர்கள், ஒரு வழக்கறிஞராகவே மாறியிருக்கலாம்” என்று குறிப்பிட்டார். மேலும், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, தான் இந்த வழக்கிலிருந்து விலக வேண்டுமா என்பது குறித்த தனது தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
இந்த மனுவின் மீதான தீர்ப்பைப் பொறுத்தே,கெஜ்ரிவாலின் விடுதலை செல்லுமா அல்லது சிபிஐ-யின் மேல்முறையீடு தொடருமா என்பது தெரியவரும்.
