திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், சர்வாதிகாரத்திலிருந்து இந்தியாவை நாம் பாதுகாக்க வேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று (மே 10) இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று இரவு 7 மணிக்கு திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து டெல்லியின் பல பகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசு மற்றும் வாண வெடிகளை கொளுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால்,
“உங்கள் அனைவரும் நன்றி, நீங்கள் என்னை ஆசீர்வதித்துள்ளீர்கள்.
இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களால் தான் உங்கள் முன்பாக நான் பேசிக்கொண்டிருக்கிறேன். சர்வாதிகாரத்திலிருந்து இந்தியாவை நாம் பாதுகாக்க வேண்டும்.
நாளை காலை 11 மணிக்கு கன்னட் பகுதியில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு செல்ல இருக்கிறேன், தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளேன்.
விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்று உங்களிடம் கூறினேன். அதேபோல தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்: ஆரவாரம் செய்த தொண்டர்கள்!
இந்தியா கூட்டணிக்கு பூஸ்டர்: கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து ஸ்டாலின்