சிவாஜி உஷா நந்தினி நடிப்பில் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதி இயக்கி 1973 ஆம் ஆண்டு வந்து, பெரும் வெற்றி பெற்ற கௌரவம் படத்துக்கான பாடல் உருவாக்கம் நடந்து கொண்டிருந்த நேரம்.
அப்போது எல்லாம் எம் எஸ் வி மெட்டுப் போடும்போதே, பக்கத்தில் உட்கார்ந்து மழையென பாடல் வரிகளைச் சொல்வார் கவியரசர் . இந்த போட்டியில் பல பாடல் மேஜிக்குகள் நடந்தது உண்டு.
இதைப் பலமுறை பார்த்த இன்ஸ்பிரேஷனில்தான் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், ஸ்ரீதேவி மெட்டைப் பாடிக் காண்பிக்க , கமல்ஹாசன் உடனே உடனே கவிதை சொல்லும், ”சிப்பி இருக்குது… முத்தும் இருக்குது” பாடலையே பாலச்சந்தர் உருவாக்கினார். . இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்தப் பாட்டும் கூட எம் எஸ் வி இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்தான் .
ஒரு கஷ்டமான தத்தகாரத்தை ஸ்ரீதேவி சொல்ல, உடனே கமல் அதற்கு வரிகள் சொல்ல, வியந்து போய் ஸ்ரீதேவி சபாஷ் என்பாரே, அது உண்மையில் எம் எஸ் வி பலமுறை கண்ணதாசனுக்குச் சொன்னது.
அப்படிதான் கவுரவம் படத்தில் பாடல் பதிவின் போது, ”அதிசய உலகம்…” என்று துவங்கும் பாடலுக்காக கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்கும் போட்டி

பல்லவி எல்லாம் ஓகே
சரணத்துக்கு மெட்டுப் போடும்போது
” பளிங்குக் கிண்ணம் ஒன்றில் மதுவை அள்ளிக் கொண்டால் ..” என்ற வரிகளுக்கான மெட்டை அமைத்து விட்டு..
அடுத்து ”தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்” என்று தத்தகாரம் சொல்லிவிட்டு எம் எஸ் வி ,
“இதுல வார்த்தைகளுக்கு அர்த்தமும் இருக்கணும். இந்த டெம்போ அப்படியே ஒரு தடவையாவது வரணும். நீ உண்மையிலேயே பெரிய கவிஞன்னா சொல்லுய்யா பாப்போம் ” என்று சவால் விட,
சற்று யோசித்த கண்ணதாசன் “பருகிடலாம்- பிறகு என்ன – தரிகிடதோம் ” என்றார் . ஆடிப் போனார் எம் எஸ் வி
அதுபோல இரண்டாவது பல்லவியில் மெட்டு சொல்லிவிட்டு எம் எஸ் வி அமைதியாக இருக்க , ”என்னடா விச்சு . இன்னொரு முறை சவால் விட எல்லாம் வேணாம் . நானே சொல்றேன் . போட்டுக்கோ .
ஒரு தரமோ – இரு தரமோ – தரிகிடதோம்” என்றார் கண்ணதாசன்
வியப்பின் எல்லைக்கே போய் எம் எஸ் வி சொன்னார் , ” கவிஞரே…. உன்ன மாதிரி ஒரு பாடலாசிரியன் இனி பிறக்கவே முடியாதுய்யா…!”
- ராஜ திருமகன்
