கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதற்குநடிகர் கவின் தான் காரணம், அடுத்த சிவகார்த்திகேயன் என சமூக ஊடகங்களில், இணைய தளங்களில் ஒரு பிம்பம் உருவானது.
இதனால் அவரது கால்ஷீட் மதிப்பு வழக்கத்திற்கு மாறாக எகிறியதுடன், அவர் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடித்து வெளியான ஸ்டார் படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது ஹரீஷ் கல்யாண் தான். அவரை வைத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் விண்டேஜ் லுக்கில் போட்டோஷூட்டெல்லாம் நடத்தி போஸ்டரை வெளியிட்டனர்.
ஆனால் ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. அதனால்அந்த வாய்ப்பு கவினுக்கு சென்றது.
ஸ்டார் திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹங்கர் நடித்திருந்தார்.
மேலும் மலையாள லால், கீதா கைலாசம், காதல் சுகுமார் என மக்களுக்கு அறிமுகமான நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
இப்படத்தின் டிரைலருக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் அறிவிப்பு நாள் தொடங்கி படம் வெளியாகும் நாள் வரை திட்டமிட்ட புரமோஷன் செய்யப்பட்டது.
அதே போன்று ஸ்டார் படம், நாயகன் கவின் மீதான பிரம்மாண்டமான பிம்பத்தை சமூக வலைத்தளங்களில் கவின் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது.
அதனால் படம் வெளியான மே 10 அன்று சென்னை மற்றும் புறநகர் திரையரங்குகளிலும், மாவட்ட தலைநகரங்களில் படம் வெளியான திரைகளில் இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.
படம் வெளியான மறுநாள்(மே 11) கூடுதலாக 180 திரைகளில் ஸ்டார் படம் திரையிடப்படுவதாக தயாரிப்பு தரப்பில் அறிவித்தனர்.
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சென்னை, மற்றும் புறநகரில் உள்ள தியேட்டர்களில் உச்ச பட்ச கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் கவின் ரசிகர்களால் முதல் மூன்று நாட்களும் முன்னிலைப்படுத்தப்பட்டது. வசூலும் நிறைவாகவே கிடைத்தது.
ஊக்கமருந்து உடம்பில் இருக்கும் வரை பலசாலியாக இருக்கும் வீரன் போன்று கவின் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்த முதல்மூன்று நாட்களும் சென்னை மற்றும் புறநகர் மால் தியேட்டர், கோவை போன்ற நகரங்களில் 80% டிக்கட்டுகள் திரையரங்குகளில் விற்பனையானது.
பிற நகரங்கள், சிறு நகரங்களில் மூன்று இலக்கத்தில் டிக்கெட் விற்பனை ஆவதே போராட்டமாக இருந்தது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில். முதல் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்த ஸ்டார் திரைப்படத்திற்கு குடும்ப பார்வையாளர்கள் வருகை இல்லை என்பதுடன், பொதுவான சினிமா பார்வையாளர்கள் வருகை மிக மந்தமாகவே இருந்ததாக கூறுகின்றனர் திரையரங்க ஊழியர்கள்.
6.50 கோடி ரூபாய்க்கு ஸ்டார் படத்தின் தமிழ்நாடு உரிமை கோயம்புத்தூர் சுப்பையாவால் வாங்கப்பட்டது.
பட வெளியீடு, விளம்பர செலவுகள் என சுமார் 8 கோடி ரூபாய் ஸ்டார் பட வெளியீட்டுக்காக விநியோகஸ்தரால் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் மூன்று நாட்கள் ஸ்டார்படத்தின் சர்வதேச அளவிலான மொத்த வசூல் 15 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்த மறுநாளே தமிழக தியேட்டர்களில் படத்தின் மொத்தவசூல் 1 கோடிக்கும் குறைவாகவே ஆனது.
முதல் மூன்று நாட்கள் மட்டுமே கவின் ரசிகர்கள் மூலம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஆதிக்கம் செலுத்திய ஸ்டார் நான்காம் நாள் முதல் இரண்டாவது வாரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த அரண்மனை – 4 படத்துடன் வசூலில் போட்டி போட்டாலும் வெற்றி பெற முடியவில்லை.
இரண்டாம் வார முடிவில் அரண்மனை – 4 அப்படத்திற்கான மொத்த பட்ஜெட்(சுமார் 20 கோடி) செலவை தமிழ்நாடு திரையரங்க மொத்த வசூல் 50 கோடியில் தயாரிப்பாளரின் பங்கு தொகையான 25 கோடி ரூபாய் மூலம் திரும்ப பெற்றுள்ளது.
ஸ்டார் படம் சர்வதேச அளவில் சுமார் 20 கோடி ரூபாய் மொத்த வசூலில் தயாரிப்பாளர் பங்கு தொகையாக சுமார் 10 கோடி ரூபாய் கிடைக்கும்.
வணிக அடிப்படையில் ஸ்டார் படம் ஓடிடி, தொலைக்காட்சி, ஆடியோ உரிமைகள் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் லாபகரமான படமாகும்.
அடுத்த சிவகார்த்திகேயன் கவின் என முன்னிலை படுத்துவதற்கு பதிலாக கதையில் கவனம் செலுத்தி அதற்கு முன் உரிமை கொடுத்திருக்க வேண்டும்.
தனிமனித பிம்ப கட்டமைப்பு ரஜினிகாந்த், விஜய் போன்ற நட்சத்திரங்களுக்கே கதை இல்லை என்றால் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தடுமாற்றம் ஏற்படுகிற சூழலில் நான்காவது படத்திலேயே அடுத்த சிவகார்த்திகேயன் என்கிற செயற்கையான பிம்ப கட்டமைப்பை கைவிட்டு கதையில் கவனம் செலுத்துவது ஆரோக்கியமானது.
– அம்பலவாணன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் பணி!
மீண்டும் கொரோனா அலை: சிங்கப்பூரில் 25,900 பேர் பாதிப்பு!
பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு தயாரான சூர்யாவின் கங்குவா.. ரிலீஸ் தேதி இதுவா..?
Comments are closed.