தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை பிரதமர் நரேந்திர மோடி மீட்டுத் தர வேண்டும் (Katchatheevu Retrieval) என்ற தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கோரிக்கைக்கு இலங்கை அரசு பதிலளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சத்தீவு விவகாரம் தீவிரமாக பேசப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் கச்சத்தீவை மீட்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கச்சத்தீவு மீட்பு- மோடியின் முயற்சி
பிரதமர் மோடி தமது பயணத்துக்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதனை வரவழைத்து பேசியிருந்தார். அப்போது, கச்சத்தீவு மீட்பு தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாட்டை வைத்தியநாதன் மூலம் அறியவ் இரும்பினார் மோடி. தமது இலங்கை பயணத்தின் போது கச்சத்தீவு தொடர்பாக முக்கிய முடிவுகளை அறிவிக்கும் வாய்ப்பிருக்கிறதா? என்பதற்காக வைத்தியநாதனிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருந்தார் மோடி.
இதனடிப்படையில் வைத்தியநாதனும், இலங்கைக்கு சென்று அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால் இலங்கை அரசு தரப்பில் மிக திட்டவட்டமாகவே, கச்சத்தீவை இந்தியாவுக்கு மீண்டும் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த விவரம், பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பிரதமர் மோடியும் தமது இலங்கை பயணத்தின் போது கச்சத்தீவு பற்றி பேசவில்லை.
மதுரையில் விஜய் கோரிக்கை
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21-ந் தேதி மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது தொடர்பாக இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கச்சத்தீவு மீட்பு கோரிக்கை- இலங்கை பதில்
இதற்கு அமைச்சர் விஜித ஹேரத் அளித்த பதில்: தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் காலம். அதனால் அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொரு தலைவரும் வெவ்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். இத்தகைய அரசியல் கருத்துகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை பொருட்படுத்தவும் தேவை இல்லை.
இந்திய அரசு தரப்பில் ஏதேனும் கருத்துகள் தெரிவித்திருந்தால் மட்டுமே நாம் பதிலளிக்க முடியும்.
கச்சத்தீவைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு ஒரு போதும் நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதுதான் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு. இவ்வாறு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
