புழல் சிறையில் ’வழக்கறிஞர்’ கஸ்தூரி… எப்படி இருக்கிறார்?

Published On:

| By Kumaresan M

தெலுங்கு பேசும் மக்களை அந்தப்புரத்து சேவகர்கள் என மிகவும் அவதூறாக பேசியதாக கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேவேளையில் கஸ்தூரிக்கு எதிராக பலர் தனிநபர் தாக்குதல்களை வீசியிருந்தனர்.

இதை தொடர்ந்து ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரி கைது செய்யப்பட்டு நேற்று நவம்பர்  17 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நவம்பர் 29 ஆம் தேதி வரை  ரிமாண்டில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார். வருமான வரி கட்டுபவர் மற்றும் இது அரசியல் சார்ந்த வழக்கு என்பதால் அவருக்கு ஏ கிளாஸ் சிறை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அறையில் டேபிள், சேர், கட்டில் , தலையணை , மின் விசிறி எல்லாம் இருக்கும். அறைக்குள்ளேயே கழிவறை வசதியும் உள்ளது. எனினும், இவ்வளவு வசதிகள் இருந்தாலும் இரவு நேரத்தில் நீண்ட நேரம் உறங்காமல் இருந்துள்ளார். அவரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் கஸ்தூரி மிகுந்த சோகத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. குழந்தையின் நினைவு அவரை வாட்டி எடுத்துள்ளது.

புழல் சிறையில் ஒன்று, இரண்டு,  மூன்று என 3 பிரிவுகள் உள்ளன. புழல் சிறை ஒன்றில் தண்டனை கைதிகள், புழல் சிறை இரண்டில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருப்பார்கள்.  புழல் சிறை மூன்றில்தான் பெண் கைதிகள்  அடைக்கப்படுவார்கள்.

பெண் கைதிகளுக்கான பகுதி என்பது 242 கைதிகளை அடைக்க முடியுமளவுக்கு 5 பிளாக்குகளை கொண்ட பெரிய வளாகம் ஆகும். இங்குதான் கஸ்தூரி அடைக்கப்பட்டுள்ளார்.  அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் , மற்றும் பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண்கள் சிலர் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடிகை கஸ்தூரி சிறைக்கு வந்ததும் ஏராளமான பெண் கைதிகள் அவரை பார்க்க ஆர்வமுடன் வந்துள்ளனர். ஆனால், கஸ்தூரி யாருடனும் பேசாமல் தனிமையில்தான் இருந்துள்ளார். எனினும், அந்த பெண்கள் அடிக்கடி வந்து எட்டி எட்டி பார்த்துள்ளனர்.

உணவு வசதிகளை பொறுத்த வரை, அவருக்கென்று தனியாக சில்வர் தட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை சிறையில் பொங்கல் மற்றும் சாம்பார் உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் வாங்கி சாப்பிட்டுள்ளார். மதியம் கீரை சாம்பார் சாதம் சாப்பிட்டுள்ளார்.

இதுபோக சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கான கேண்டீனிலும் உணவு வாங்கி கஸ்தூரி சாப்பிட முடியும். எனினும் அங்கு ஒரு கைதி வாரத்துக்கு அதிகபட்சமாக 750 ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மற்றும் உணவை மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். அதற்கு மேல் வாங்க முடியாது.

சிறை கேண்டீனில் கேசரி, காபி, இட்லி, பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒரு  காலை உணவு வழங்கப்படும். அதே போல மதியம் தக்காளி, வெஜிடபிள் பிரியாணி, லெமன் சாதம் , தயிர்சாதம்  என 7 நாட்களுக்கும் ஒவ்வொரு விதமான சைவ உணவு வழங்கப்படும். இங்கு அசைவம் கிடையாது. மேலும் டோக்கன் கொடுத்து உணவு  வாங்கி சாப்பிட்டு கொள்ள முடியும். அதோடு, இந்த கேண்டீனில் எண்ணெய், சோப்பு, பேஸ்ட், பிரஷ் போன்றவையும் கிடைக்கும்.

இவை எல்லாவற்றுக்குமே சேர்த்து  வாரத்துக்கு 750 ரூபாய்தான் செலவு செய்ய முடியும். இந்த அக்கவுண்டுக்கு prisoners cash and property என்று சொல்கிறார்கள்.

கைதியின் அக்கவுண்டில் கைதியின்  உறவினர்கள் அல்லது நண்பர்கள்  பணம் செலுத்த வேண்டும். சிறைக்குள் சென்றதுமே இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டு விடும். சிறைக்குள் செல்லும் போது உடல் முழுமையும் சோதனை செய்வார்கள்.

தாலி செயின், பணம் , கொலுசு  உள்ளிட்ட கைதிகளின் உடைமைகளை கழற்றி அவரின் பெயரில் வரவு வைத்து விடுவார்கள். ரிமாண்ட் காலம் முடிந்து கைதி சிறையை விட்டு செல்லும் போது, இந்த உடைமைகள் அவர்களிடத்தில் சிறை நிர்வாகம் ஒப்படைத்து விடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-வணங்காமுடி

‘சினிமாவை விட்டு விலக சொன்னார்’ : நயன்தாரா யாரை சொல்கிறார்?

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் டி கிருஷ்ணகுமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share