சென்னையில் எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சாந்தோம் சாலையில், போலீசார் பிடியில் இருந்த ரவுடி தப்பிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை கேட் 1 முன்பு கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் வெடிகுண்டு வீசியதால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்கவில்லை.
இந்த சம்பவத்தால் தமிழகத்தில் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வாரண்ட் உள்ளவர்கள், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டது.
இதனால் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வாரண்ட் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து போலீசார் கைது செய்து வருகின்றனர்..
அந்தவகையில் காசிமேடு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கஞ்சா கடத்தல் மன்னன் மற்றும் கொலை குற்றவாளியான மதன் என்ற திலீப்குமார் இன்று கைது செய்யப்பட்டார்.
மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்து வந்த இவர் இன்று (அக்டோபர் 27) காசிமேடு பகுதியில் நடமாடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, காசிமேடு காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் சென்ற ஸ்பெஷல் டீம் மடக்கி பிடித்தது.

எஸ்.ஐ மாதேஸ்வரன், போலீசார் ஜீவா, நல்லத்தம்பி ஆகியோர் ரவுடி மதனை பிடித்து, அவசரத்துக்கு வாகனம் கிடைக்காததால் அங்கிருந்து ஆட்டோவில் அழைத்து வந்தனர்.
பட்டினப்பாக்கம் சிக்னலில் மதியம் இரண்டு மணியளவில் ஆட்டோ நின்றபோது போலீஸைத் தள்ளிவிட்டு இறங்கிய ரவுடி மதன் ஆட்டோவுக்கு பின் நின்றிருந்த மாநகராட்சி பேருந்து டயருக்கு அடியில் கழுத்தை வைத்துக்கொண்டு போலீசாரை மிரட்டினார்.
இதை பார்த்த போலீசார் மதனை இழுத்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால் மஃப்டியில் இருந்த எஸ்.ஐ மாதேஸ்வரன் உட்பட இரு போலீசார் மீது தாறுமாறாக கிழித்ததுடன், தனது கழுத்திலும் கிழித்துக்கொண்டார்.
இதனால் கடற்கரை சாலை சற்று ஸ்தம்பித்து போனது. சுமார் 15 நிமிடங்களுக்கும் மேல் போராடிய போலீசார் பேருந்து டயருக்கு அடியில் கிடந்த மதனை அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் தூக்கி ஆட்டோவில் போட்டுக்கொண்டனர். அருகில் இருந்த பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து கைவிலங்கை எடுத்து வரச் சொல்லி ஆட்டோவில் இருந்த கம்பியில் வைத்து பூட்டி காசிமேடு காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை பற்றி காசிமேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷிடம் நாம் பேசியபோது, “இந்த மதன் ஆந்திராவிலிருந்து கஞ்சா எடுத்து வந்து சப்ளை செய்கிறவன். இவன் மீது இரண்டு கொலை வழக்கு, கஞ்சா வழக்கு உட்பட 25 வழக்குகள் உள்ளன.
இவனை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியாது. இவரது மனைவி சில தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக கோஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கு எப்படியும் ரவுடி மதன் வருவான் என்று நினைத்து அந்த மருத்துவமனையில் ஒரு ஸ்பை ஏற்பாடு செய்து வைத்திருந்தோம்.
அதன்படி இன்று மருத்துவமனைக்கு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு மஃப்டியில் சென்று பிடித்து வந்தோம்.
இந்த மதன் எளிதில் சிக்க மாட்டான், அப்படி கண்டுபிடித்து பிடிக்க போகும் போலீஸ் மீது பிளேடால் கிழித்து விடுவான் அல்லது கடித்துவிடுவான், தன்னை தானேவும் கிழித்துக் கொள்வான், அதோடு பொதுமக்கள் யாரேனும் அருகில் இருந்தால் அவர்களையும் பிளேடால் கிழித்துவிடுவான். இதெல்லாம் போலீசாரின் கவனத்தை திருப்பும் செயல். இந்த நேரத்தில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்தாலும், தப்பித்துவிடுவான்.
அதனால்தான் பட்டினப்பாக்கம் சிக்னலில் ஆட்டோ நின்றபோது பொதுமக்களை எதாவது செய்துவிடுவான் என்று பதறிப்போனோம்” என்றார்.
பட்டினப்பாக்கம் போலீசாரோ தங்களது லிமிட்டில் டிராஃபிக் ஸ்தம்பித்தது என்று டென்ஷனாகி அங்கிருந்தவர்களிடம் கோபத்தை காட்டினார்கள் என்கிறார்கள் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பி.கே.கிட்டு
