ADVERTISEMENT

காஷ்மீர்: பதற்றமான எதிர்வினைகளால் பலனில்லை!

Published On:

| By Minnambalam Desk

Tension-fueled reactions are ineffective

அனுராதா பாசின் Tension-fueled reactions are ineffective

என் நினைவுக்கு எட்டிய வரை, ஜம்மு-காஷ்மீரின் நிலப்பரப்பில் எப்போதுமே ராணுவத்தின் இருப்பு தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. 1990 கிளர்ச்சிக்குப் பிறகு, குறிப்பாக காஷ்மீர் பகுதியில், நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் வரைபடமாக்கப்பட்டது. எனது குழந்தைப் பருவத்தை விட இராணுவத்தின் இருப்பு மிகவும் அடர்த்தியாகிவிட்டது.

வனாந்தரங்கள் அல்லது சில தொலைதூர கிராமங்களைத் தவிர எல்லா இடங்களிலும் கடந்த 35 ஆண்டுகளாக இராணுவம், துணை ராணுவப் படைகள் அல்லது காவல்துறை பெருமளவில் இருந்துவருகின்றன. படையணிகளைச் சேர்ந்தவர்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை எங்கும் பார்க்க முடியும்.

ADVERTISEMENT

இந்நிலையில், ‘காஷ்மீரின் மினி-சுவிட்சர்லாந்து’ என்று அரசாங்கம் விளம்பரப்படுத்திவந்த ஒரு சுற்றுலாத் தலம் முழுமையாகப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது.

25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் குதிரை வண்டிக்காரரும் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் பைசரன் புல்வெளியைச் சுற்றியுள்ள முகடுகளில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. புல்வெளிக்குச் செல்லும் பாதையில் யாரும் இல்லை, அந்த இடத்தை அடையப் பாதுகாப்புப் படையினருக்கு ஒரு மணிநேரத்திற்கும் மேலாகியது, அதற்கு முன்பே உள்ளூர்வாசிகள் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை மீட்டிருந்தனர்.

ADVERTISEMENT

டெக்கான் கிரானிக்கிள் செய்தியின்படி, பைசரனுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை நிறுவனங்களில் ஒன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

Tension-fueled reactions are ineffective

பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததாக ஒப்புக்கொள்ளும் அரசு, உண்மைக்கு மாறான, தவறான சாக்குப்போக்குகளைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பாதுகாப்புக் குறைபாடு பேரழிவை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. இது அரசின் மோசமான திறமையின்மையை அம்பலப்படுத்துகிறது.

ADVERTISEMENT

இது திறமையின்மையால் நிகழ்ந்ததா அல்லது காஷ்மீரின் இயல்பு நிலை தொடர்பாக அரசு முன்வைக்கும் கதையாடல் அரசையே ஏமாற்றிவிட்டதா? சுற்றுலாப் பயணிகள் கொல்லப்படுவதற்கு முன்னதாக, பாதுகாப்புத் தவறுகளை வெளிப்படுத்தும் சம்பவங்கள், இத்தகைய மீறல்கள் தொடர்ந்து நடப்பதைக் காட்டுகின்றன.

இந்தச் சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் பாதுகாப்பை நேரில் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறிய நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளோ ‘அது கட்டுப்பாட்டில் உள்ளது’ என்று கவனமாகக் கூறினார்கள்.

இயல்புநிலை என்னும் கதையாடலை மீறி, காஷ்மீர் உலகின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகவே இருக்கிறது. 2019க்குப் பிறகு, படைகள் உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்குத் தீர்வுகாண்பதற்குப் பதிலாக, பொதுமக்களைக் கண்காணிப்பதிலும் அவர்களைக் கட்டுப்படுத்துவதிலும் முதன்மையாகக் கவனம் செலுத்துகின்றன.

இந்தத் தவறான நடவடிக்கைகளால் பாதுகாப்பு விஷயத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதா? இந்தக் காரணங்களினால்தான் பாதுகாப்பு ஓட்டைகள் ஏற்பட்டுள்ளனவா? யதார்த்தமான, முழுமையான மதிப்பீடு இல்லாமல், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய முடியாது.

kashmir Tension-fueled reactions are ineffective

ஏப்ரல் 22 கொலைகளுக்கான பகுத்தறிவு சார்ந்த எந்தவொரு அணுகுமுறையும், முறையான குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்வது, குற்றவாளிகளைத் தண்டிப்பது என்னும் இரு விதமான அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்தியாவின் எதிர்வினை நன்கு சிந்திக்கப்பட்டு, உண்மைகளின் அடிப்படையில் கவனம் செலுத்தப்பட்டு, அறுவை சிகிச்சைக்கான துல்லியத்துடன் செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தின் எதிர்வினைகளில் இவற்றைக் காண முடியவில்லை.

அரசின் பதற்றமான எதிர்வினை முக்கியமான பாதுகாப்புக் குறைபாடுகளை மூடி மறைப்பதாக மட்டுமல்லாமல், ஆதாரங்கள்  இல்லாமல் அனுமானங்களின் அடிப்படையிலும் உள்ளது. சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குள், பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பே, பாகிஸ்தான்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணைகள் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை. ஏற்கெனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது. பாகிஸ்தான் இராணுவத் தலைவர் எரிச்சலூட்டும் வகையில் மோசமான கருத்துக்களை அண்மையில் வெளியிட்டார். பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீரில் தலையிட்டுவருகிறது; கடந்த ஆண்டு பிர் பஞ்சலில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் இராணுவமும் அதன் உளவுத்துறை இயக்கமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸும் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவுடனும் அதன் துணை அமைப்புகளுடனும் தொடர்புகளைக் கொண்ட உள்ளூர் கிளர்ச்சிக் குழுவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான்மீதான சந்தேகங்கள் வலுவாக உள்ளன. ஆனால் அத்தகைய அனுமானங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தொலைக்காட்சி சேனல்கள் பெயர் குறிப்பிடப்படாத பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் புகைப்படத்தை வெளியிட்டன.  அதில் இரண்டு வெளிநாட்டினர், இரண்டு உள்ளூர்வாசிகள். பாதுகாப்புப் படைகள் வருவதற்கு முன்பே, தாக்குதல் நடத்திய அனைவரும் எந்தத் தடயமும் இல்லாமல் வெளியேற முடிந்தது.

இது உண்மையைக் கண்டறிவதை இன்னும் கடினமாக்குகிறது. இந்திய, பாகிஸ்தான் படைகள் மோதலில் இறங்குவது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பது, சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளால் இந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tension-fueled reactions are ineffective

மோதல் நிகழ்ந்தால் அது தீவிரமானதாக இருக்காது என்றும், அணு ஆயுத வலிமை கொண்ட இரண்டு அண்டை நாடுகளுக்கிடையே முழுமையான போர் ஏற்படாது என்றும் மூலோபாய நிபுணர்கள் கருத்து தெரிவித்தாலும், இரு நாடுகளுக்கிடையிலான எந்தவொரு விரோதப் போக்கின் விளைவுகளையும் ஜம்மு-காஷ்மீர் மக்கள், குறிப்பாக எல்லைகளில் உள்ளவர்கள்தான் தாங்கிக்கொள்கிறார்கள். மாறிவரும் புவிசார் அரசியல் உலகில், இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான எந்தவொரு சாகசத்திற்கும் எதிரான தடுப்புகள் மிகவும் பலவீனமானவை.

இந்திய-பாகிஸ்தான் தகராறு 1,000 ஆண்டுகளுக்கும் மேலானது என்றும், பாகிஸ்தான் பிறப்பதற்கு பத்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய நெருக்கடி என்றும் விவரிப்பதன் மூலம் அமெரிக்கா இந்த விஷயத்திலிருந்து விலகி நிற்கிறது.

இந்தியத் தரப்பில் கருதப்படுவது போல் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றால், ஏதோ ஒரு மட்டத்தில் உள்ளூரில் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறை நிராகரிக்க முடியாது. ஆனால், தாக்குதலுக்குப் பிறகு சுமார் ஒரு டஜன் வீடுகளை இடித்துச் சேதப்படுத்தியதில் காணப்படும் பழிவாங்கும் நடவடிக்கையின் தீவிரம் அச்சமூட்டுகிறது. பயங்கரவாதிகள், சதிகாரர்கள் என்று கூறப்படுபவர்களின் குடும்பங்களுக்கு கூட்டு தண்டனை விதிக்கப்படுகிறது; நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் தேவைக்கு அதிகமான எதிர்வினைகள்.

இந்தியப் பாதுகாப்பு அமைப்புகளால்கூட உணர முடியாத ஒரு சதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. சமீபத்திய அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, காஷ்மீரில் செயல்படும் போராளிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்ணிக்கையாக இருந்தது. இதில் உள்ளூர் போராளிகள் பத்துக்கும் குறைவாகவே இருந்தனர்.

அரசாங்கத்தின் சமீபத்திய கூற்றுகளுக்கு மாறாக, தடுப்புக்காவல்களின் அளவு அதிகமாக உள்ளது. பயங்கரவாதிகளின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை கொடூரமானது, ஏனெனில் அவை பயங்கரவாதிகளின் செயல்களுக்குத் தொடர்பில்லாத அவர்களின் குடும்பங்களை பாதிக்கின்றன. பஹல்காம் கொலைகளுக்குப் பிறகு முதிர்ச்சியைக் காட்டிய காஷ்மீரிகளுக்கு எதிரான கூட்டுத் தண்டனையைக் குறிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் அநீதியானவை, எதிர்மறையானவை. காஷ்மீரில் இருக்கும் மக்களை மேலும் விரோதமாக இல்லாவிட்டாலும் மேலும் அந்நியப்படுத்தக்கூடியவை.

பாகிஸ்தானுடனான எல்லைகளில் தவறான சாகசம் நிகழ்ந்தாலோ பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கிழக்குப் பகுதியில் மோதல்களில் ஈடுபட்டாலோ இந்தியாவிற்குப் பாதிப்பு ஏற்படும். பிளவுபடுத்தக்கூடிய பேச்சும் வெறுக்கத்தக்க வார்த்தை ஜாலங்களும் ஏற்கனவே நாட்டை உள்ளிருந்து பலவீனப்படுத்திவருகின்றன.

Tension-fueled reactions are ineffective

இந்தியா அல்லது பாகிஸ்தானால் நீண்டகாலப் பதற்றங்களைத் தாங்க முடியாது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு படி பின்வாங்கி, பொறுப்பற்ற முறையில் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்வதை நிறுத்த ஒப்புக்கொள்வதுதான் முன்னோக்கிச் செல்லும் ஒரே வழி. போர் வெறியையும் பதற்றங்களையும் குறைக்க வேண்டும். வரலாற்றுப் பதற்றங்களையும் தற்போதைய நெருக்கடியையும் ராஜதந்திர ரீதியாகச் சமாளிக்க வேண்டும்.

பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலையை பாகிஸ்தான் அங்கீகரிக்க வேண்டும் என்றாலும், பஹல்காம் தாக்குதலை விசாரிக்க இந்தியா தனது முயற்சியை முறையாக மேற்கொள்ள வேண்டும். பின்னர் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கு ஒத்துழைக்க பாகிஸ்தானைக் கட்டாயப்படுத்த அதற்கான ஆதாரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

சான்றுகள் பகிர்வு, ஒத்துழைப்பு தொடர்பான கடந்த கால அனுபவங்கள் தோல்வியடைந்திருந்தாலும், இந்த முட்டுக்கட்டையிலிருந்து வெளியேறவும், பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் இதுவே ஒரே வழி.

பஹல்காம் சம்பவம் காஷ்மீரைப் பொறுத்தவரை இந்தியாவின் தோல்வியுற்ற கொள்கையையும் அதன் உள்ளார்ந்த ஆபத்துகளையும் அம்பலப்படுத்துகிறது. இஸ்ரேல் போன்ற நடவடிக்கை, கடுமையான பதிலடி போன்ற கூக்குரல்கள் நாடு முழுவதும் கேட்கின்றன. அவற்றுக்கேற்ப காஷ்மீரில் கடுமையான நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. அரசாங்கம் இவற்றைத் தவிர்த்துவிட்டுத் தீர்வுகளுக்கான மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.

*

அனுராதா பாசின், காஷ்மீர் டைம்ஸ் இதழின் ஆசிரியர். A Dismantled State: The Untold Story of Kashmir After 370 நூலை எழுதியவர்.

நன்றி: தி வயர் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share