விவேக் கணநாதன்
இந்திய வரலாற்றிலேயே மிக அதிகமாக சீனத்துக்கு அரசு முறை பயணம் செய்த பிரதமர் மோடி. பிரதமராக ஐந்து முறை, குஜராத் முதல்வராக நான்கு முறை.
ஆனால், மோடியின் ஆட்சியில்தான், சீனப்போருக்குப் பிறகான மிக அதிகமான எல்லைப் பதற்றத்தை சீனத்துடன் இந்தியா சந்திக்கிறது. இவ்வளவு சந்திப்புகளுக்குப் பிறகும், சீனாவோடு சுமுகமான சூழலை மோடியால் ஏற்படுத்த முடியவில்லை. ஏன்?
2017 டோக்லாம் பிரச்சினைக்குப் பிறகு, 2018 ஏப்ரலில் சீனம் சென்ற மோடி, சீன அதிபருடன் இரண்டு நாள் ‘Informal Summit’இல் கலந்துகொண்டார். இந்தியாவில் எந்த பிரதமரும் சீனாவுடன் இத்தகைய Informal summitஇல் ஈடுபட்டதில்லை. இதுவே முதன்முறை.
இந்த Informal Summitஇல் இருநாட்டு ராணுவ நிலைகள் தொடர்பான தகவல் பரிமாற்றம் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. Doklam Standoffஇன் முக்கிய காரணி, தகவல் பரிமாற்ற பிரச்சினையாகக் கருதப்பட்டு, அதன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
பிறகு, மாமல்லபுரத்தில் வணிகம் தொடர்பான Informal Summit 2019 அக்டோபரில் நடந்தது. ஆனால், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக , காஷ்மீரை மாநில அந்தஸ்திலிருந்து மதிப்பு நீக்கம் செய்திருந்தது பாஜக.
காஷ்மீர் அந்தஸ்து நீக்கத்துக்குப் பிறகு, இந்தியாவுடனான ராணுவ தகவல் ஒத்துழைப்பைத் தூக்கி விட்டத்தில் போடும் முடிவுக்கு வந்தது சீனா. தொடர்ச்சியாக சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் ஆதரவு போக்கை சீனா கையில் எடுத்தது.
இன்னொருபக்கம், சீனாவோடு வணிகம் செய்ய பாஜக அரசு ஒப்பந்தங்கள் போடும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், சீனப் பொருட்களைத் தவிர்ப்போம் என ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த முரண்பாடு, சீனாவை எரிச்சலூட்டியிருக்கிறது.
சீனாவை எப்படிக் கையாள்வது என ஆர்எஸ்எஸ்ஸுக்கும் பாஜகவின் இன்னொரு தரப்புக்கும் இடையில் இருக்கும் முரண்பாடே, சீனா உறவில் இப்போதைய சிக்கல்களின் ஆதாரம்
இந்த முரண்பாடே, இப்போது சீனம் காட்டும் ‘ஆக்ரோஷத்துக்கும்’ முக்கிய காரணம் என்றே ராஜ்ஜிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழல், வழக்கமான Standoff ஆக இல்லாமல், பதற்றத்துக்குரியதாக மாறியதில் காஷ்மீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
2019 ஆகஸ்ட்டில் காஷ்மீர் அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த ஒரே வாரத்தில், 1984 முதல் பல நூறு உயிர்களையும், கோடிகளையும் கொட்டி காத்துவந்த சியாச்சின் முகடு பகுதிகளைச் சுற்றுலாவுக்குத் திறந்துவிட்டது மத்திய அரசு.
காஷ்மீரை அந்தஸ்து நீக்கம் செய்ததை சீனா கண்டித்தது. அடுத்த சில தினங்களில் சீன – பாகிஸ்தான் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் சந்திப்பு நடந்தது. ‘அப்போதே இந்தியா சுதாரித்திருக்க வேண்டும். இப்போது சியாச்சின் முகட்டின் ஒருபக்கம் பாகிஸ்தான், மறுபக்கம் சீனா என இந்தியா நெருக்கப்பட்டிருக்கிறது’ என்கிறார் முன்னாள் ராணுவ அதிகாரி ப்ரவீன் ஷாநே.
சீனம் எப்போதுமே உளவியல் ரீதியாக எதிரிகளை அச்சுறுத்தும். எண்ணிக்கை பலம், ஆயுத பலம், தளவாட பலம் குறித்த கட்டுக்கதைகளை உருவாக்கி உளவியல் ரீதியாக எதிரியை நடுக்குறச் செய்யும். 1962 சீனப்போர், டோக்லாம், இப்போது லடாக் எல்லாவற்றிலும் அதுதான் உத்தி.
ஆனால், டோக்லாம் பிரச்சினையில் இந்தியா உடனடியாக எதிர்வினை ஆற்றியது. காரணம், பூடான் தந்த ‘Moral ground support’. அதனால், சீனம் பின்வாங்கியது. கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றி என்றே அதைச் சொல்லலாம்.
ஆனால், இம்முறை சீன படைகள் பின்வாங்கும் மனநிலையிலேயே இல்லை என்கிறது செய்திகள். காரணம், டோக்லாம் பிரச்சினை என்பது சீனாவின் சாலை உருவாக்கத்தை ஒட்டி எழுந்தது. ஆனால், இம்முறை சீனா தனக்குத் தேவையான கட்டமைப்புகளைக் கடந்த இரண்டரை ஆண்டுகளில் உருவாக்கிவிட்டது என்கிறார்கள்.
இந்தியாவிடமும் போதுமான கட்டமைப்பு உள்ளது. கால்வன் பள்ளத்தாக்கு அருகே எல்லைக்குப் பக்கவாட்டில் முக்கிய பாலத்தை இந்தியா கட்டியுள்ளது. வித்தியாசம், சீன கட்டமைப்புகள் சொந்தத்தயாரிப்பு. நம்முடையவை இறக்குமதிகள்.
ஆனால், இம்முறை இந்தியாவின் உடனடி எதிர்வினை தாமதமாகியிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதியே எல்லையில் சீன ராணுவ Convey குவிக்கப்பட்டு வருவதை உளவுத் துறை மத்திய அரசுக்குச் சொன்னது. ஆனால், நிலைமை குறித்து ஒரு மாதம் கழித்து, மே 18 அன்று தான் பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியது.
மே 5 லடாக்கில் 250 இந்திய – சீன வீரர்கள் இரும்பு, கம்போடு ‘கைகலப்பில்’ ஈடுபட்ட செய்தி வந்தது. ஆனால், அது தனிப்பட்ட நிகழ்வு என இந்தியத் தரப்பில் ஊடகங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், மே 8 அன்று பழைய நிலைக்குத் திரும்ப தொலைபேசி வழியாக கோரிக்கை விடுத்தார் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர்.
இந்தியக் கோரிக்கைக்கு மறுநாள் சிக்கிம் எல்லையில், பாங்க்காங்க் சுவோ பகுதியில் மீண்டும் கைகலப்பு நடந்தது. இந்தியாவின் வெளிப்படைத் தன்மையின்மை, இந்தியாவுக்கே சிக்கலைத் தருகிறது.
டோக்லாம் பிரச்சினை போல ஒரு இடத்தை மையப்படுத்தி இப்போதைய சிக்கல் இல்லை. காஷ்மீரில் சியாச்சின் முகடு அடங்கிய லடாக் பகுதி, சிக்கிம் எல்லை , அக்சய் சின் பகுதியையொட்டிய கால்வன் பள்ளத்தாக்கு என மூன்று பகுதிகளில் சிக்கல் எழுந்துள்ளது. மூன்று பகுதிகளிலும் இந்தியாவை நெருக்குகிறது சீனா.
2017 டோக்லாம் பிரச்சினை முடிவுக்குப் பிறகு, இந்த எல்லைகள் அனைத்திலும் சீனா தன் கட்டமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது. 2017க்குப் பிறகு, உடனடியாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மாற்றப்பட்டார். முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பட்டத்தோடு நிர்மலா சீதாராமன் பொறுப்புக்கு வந்தார்.
சீனா தன் கட்டமைப்புகளைப் பெருக்கிக் கொண்டிருந்த அக்காலத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர், நிர்மலா சீதாராமன். சீனா தன் கட்டமைப்புகளை வலுப்படுத்தியுள்ளதை நிர்மலாவே ஒருமுறை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரை ஒரு வணிக பூமியாக பாஜக அரசு பார்க்கிறது. காஷ்மீரின் மாநில அந்தஸ்தை நீக்கிய உடனேயே, மிக மிக முக்கிய இடமான சியாச்சின் பகுதியைச் சுற்றுலாவுக்கு அனுமதித்தது அதன் முக்கிய கட்டம். சுற்றுலா, போக்குவரத்து என வணிகத்தைச் சுற்றி பாஜக அரசு திட்டமிடுகிறது.
மாநில அந்தஸ்து நீக்கம் நடைபெற்ற சில தினங்களில் அதானி சில முதலீட்டு முயற்சிகளில் இறங்கினார். ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்கள் பல்லாயிரம் கோடியைக் கொட்டத்தயாராக இருப்பதாக பாஜக ஆதரவு ஊடகங்கள் செய்தி வாசித்தன.
காஷ்மீர் சொர்க்க பூமியாகப் போகிறது என பிடில் வாசிக்கப்பட்டது. இப்போதுகூட, ஊரடங்கு கால தனியார்மயமாக்க அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்த காஷ்மீரில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், எல்லா காலத்திலும் காஷ்மீர் எல்லைச் சிக்கலுக்குரிய பிரச்சினை என சீனா நிறுவ நினைக்கிறது. வணிகத்துக்குத் தேவையான அமைதியை சீனா, பாகிஸ்தானோடு இணைந்து கேள்விக்குரியதாக்குகிறது. பாஜகவின் வணிக விருப்பத்துக்கும், சீனத்தின் நில ஆசைக்கும் இடையில் சிதைந்துகொண்டிருக்கிறது காஷ்மீரின் வரலாறும், வாழ்க்கையும்.
கட்டுரையாளர் : விவேக் கணநாதன் , ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர், சாதி, மதம், பண்பாடு, சினிமா, மானுட உளவியல் சித்தாந்தங்கள் குறித்து எழுதிவருகிறார்.
தொடர்புக்கு: writetovivekk@gmail.com
