அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எஃப்பிஐ (FBI) இயக்குநராகத் தனது தீவிர ஆதரவாளரான காஷ் படேலை (Kash Patel) நியமித்தது முதலே சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. “இவர் இந்தப் பதவிக்குத் தகுதியானவர் தானா?” என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்க, இப்போது எஃப்பிஐ ஏஜெண்டுகளே அவருக்கு முதுகுக்குப் பின்னால் ஒரு நக்கலான பட்டத்தைச் சூட்டி அழைத்து வருகிறார்கள்.
அதுதான் “Make-a-Wish Director”.
அது என்ன ‘மேக்-அ-விஷ்’ (Make-a-Wish)? அமெரிக்காவில் ‘மேக்-அ-விஷ்’ என்பது உயிருக்குப் போராடும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கடைசி ஆசையை நிறைவேற்றும் ஒரு பிரபலமான தொண்டு நிறுவனம். ஆனால், இங்கே காஷ் படேலை இப்படிக் கூப்பிடக் காரணம் வேறு. “உலகின் மிக முக்கியப் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் வளங்களையும், பணத்தையும் பயன்படுத்தித் தனது சொந்த ஆசைகளையும் (Bucket List), சொகுசு வாழ்க்கையையும் அவர் தீர்த்துக்கொள்கிறார்” என்பதே இதன் அர்த்தம்.
முன்னாள் அதிகாரி வைத்த பகீர் குற்றச்சாட்டு: எம்எஸ்என்பிசி (MSNBC) தொலைக்காட்சியில் பேசிய முன்னாள் எஃப்பிஐ அதிகாரி கிறிஸ்டோபர் ஓ லியரி (Christopher O’Leary), காஷ் படேலின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “இவர் எஃப்பிஐ இயக்குநர் பதவிக்குச் சற்றும் தகுதியற்றவர். இவர் செய்யும் வேலைகளைப் பார்த்துத்தான் ஏஜெண்டுகள் அவருக்கு இந்தப் பட்டத்தை வைத்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
அரசு விமானத்தில் ஜாலி டூர்? காஷ் படேல் மீது வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டுகள் இதோ:
- நியூக்ளியர் ஜெட்: அணு ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்யும் அவசர மிஷனுக்காக (Render Safe Mission) பயன்படுத்தப்படும் பிரத்யேக ‘757 ஜெட்’ விமானத்தை எடுத்துக்கொண்டு, ஐஸ் ஹாக்கி வீரர் அலெக்ஸ் ஓவெச்சின் (Alex Ovechkin) கோல் போடுவதைப் பார்க்கப் பறந்துள்ளார்.
- காதலிக்குச் சலுகை: தனது காதலி அலெக்சிஸ் வில்கின்ஸ் (Alexis Wilkins), ஒரு மல்யுத்தப் போட்டியில் (Wrestling Match) தேசிய கீதம் பாடுவதைப் பார்ப்பதற்காகவும் அரசு விமானத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
- சொகுசு வாழ்க்கை: ஸ்காட்லாந்தில் கோல்ஃப் விளையாடுவது, யுஎஃப்சி (UFC) சண்டையைப் பார்க்கப் போவது, டெக்சாஸில் உள்ள பண்ணை வீட்டில் தங்குவது என அரசுச் செலவில் உலகம் சுற்றுகிறார்.
வெள்ளை மாளிகை ரியாக்ஷன்: “காஷ் படேல் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா?” என்ற கேள்வி எழுந்த நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இதை மறுத்துள்ளார். “இந்தச் செய்தியைக் கேட்டு அதிபர் டிரம்ப் சிரித்தார். ‘இதெல்லாம் பொய்… காஷ் படேல் சிறப்பாக வேலை செய்கிறார்’ என்று சொல்லி அவருடன் சிரித்தபடி ‘தம்ஸ் அப்’ காட்டி போட்டோ எடுத்துக்கொண்டார்,” என்று லீவிட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். எது எப்படியோ, “ஊர் எரியும் போது பிடில் வாசித்த கதை” போல, அமெரிக்க அரசியலில் புயல் வீசும்போது காஷ் படேல் ஜாலியாக ‘ஜெட்’ ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு!
