கோழிப்பண்ணை செல்லதுரை பட விவகாரம் : கரு.பழனியப்பனுக்கு சீனு ராமசாமி பதில்!

Published On:

| By Minnambalam Login1

karu palaniappan seenu ramasamy

தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன்.

கடந்த இருபது வருடங்களில் இவரது இயக்கத்தில் ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘மந்திரப்புன்னகை’, ‘சதுரங்கம்’, ‘ஜன்னல் ஓரம்’ என ஆறு படங்கள் மட்டுமே வெளியானது.’பார்த்திபன் கனவை’ தவிர்த்து மற்ற ஐந்து படங்களும் வணிக ரீதியாக தோல்வியை தழுவிய படங்களாகும்.

நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல் என மாற்றம் கண்ட கரு.பழனியப்பன், சீனு ராமசாமி இயக்கத்தில் இந்த வருடம் வெளியான ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை மட்டும் அன்றி அந்தப் படத்தை சிலாகித்து, பாராட்டி பேசியவர்களையும் வஞ்சப் புகழ்ச்சி செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவிற்கு தனது பாணியில் பணிவாகவும், பாந்தமாகவும் முகநூல் வாயிலாக பதில் கூறி சமூகவலைத்தளத்தை அறிவுப்பூர்வமான, ஆரோக்கியமான விவாத தளமாக்கியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

கரு.பழனியப்பன் முகநூல் பதிவில்,

“இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு….

கடந்த ஒரு மாத காலமாய் கண்டவிடத்தில் எல்லாம் “அண்ணே கோழிப்பண்ணை செல்லதுரை படம் பாக்கலையா? பாத்துட்டு , நாலு வரி நல்லதா , முகநூலில் எழுதுங்க” என்று சொல்லிக் கொண்டே இருந்தீர்கள்.

கல்லூரிக் காலம் முதலேயே நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவோம் என்றாலும் இதுவரை கடிதம் எழுதிக் கொண்டதில்லை.

இதுவே முதல் கடிதம். உங்களுடைய கோழிப்பண்ணை செல்லதுரை  திரைப்படம், அரங்க வெளியீட்டின் போது வெற்றி பெறவில்லை எனினும் ஓடிடி தளங்களில் வெளியான பின் பலரும் தங்களை பாராட்டுகின்றனர். அதை தாங்களும் , தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்கின்றீர்.நிற்க.

உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் கோழிப்பண்ணை செல்லதுரை போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து ஒருவர் பாராட்டுவது என்பது அவருடைய பண்பை காட்டுகிறது.

அதை நமக்குரியது என நினைத்து ஏற்றுக் கொள்வது நம் பயணத்தை தடை செய்யக்கூடும்.சீனு ராமசாமி ஆகிய நீங்கள் செல்ல வேண்டிய தூரமும் அடைய வேண்டிய உயரமும் அளப்பரியது. இந்தக் குழந்தைப்பாராட்டுகளில் குதூகலித்து தேங்கி நின்று விடாதீர்கள்.

 

“நடிப்பின் அசுரன் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா” என்ற அடைமொழிகளோடு தாங்கள், கஸ்தூரிராஜா தங்களுக்கு எழுதிய பாராட்டை பகிர்ந்து இருந்தீர்கள்‌. நல்லது. மகிழ்ச்சி.

தனக்கு அடுத்த தலைமுறை இயக்குனர்களின் மேல் கஸ்தூரிராஜா காட்டும் அன்பு அது. இதனால் என்ன நன்மை விளையும் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள்.

முகம் தெரியாத ரசிகன் நம் படைப்பை ஆரவாரித்து கொண்டாடி வெற்றி பெற செய்ய வேண்டும். அது நிகழும் போது முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நம்மோடு கைகோர்த்து அடுத்த படம் செய்ய வருவார்கள், என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே.

‘தென்மேற்கு பருவக்காற்று’ ‘தர்ம துரை’ படங்களுக்கு மேலாக , சிறந்த படைப்பையும் மேலான வெற்றியையும் உங்களது அடுத்த படம் அடையட்டும் ” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து சீனு ராமசாமி வெளியிட்டிருக்கும் பதிவில்

“அதிகாலை காப்பி குடிக்கும் ஒரு இடத்தில் ஏதேச்சியமாக சந்திக்கும் போதெல்லாம் என் படத்தை பற்றி உங்களை நல்லபடியா நாலு வார்த்தை எழுதும்படி நான் கேட்டேன்.

இப்படித்தான் என் முதல் படம் முதல் உங்களைப் போன்ற பிரபலங்களிடம் கேட்பேன். தங்களின் புகழ் வாய்ந்த சொற்களில் இந்த எளியோனின் திரைப்படத்தில் இருக்கும் குறைகள் சற்று மன்னிக்கப்பட்டு தங்களின் ரசிகர்கள் தங்களின் அபிமானிகள் இந்த படத்தை மேலும் கொண்டாடக் கூடும்.

சந்தர்ப்ப சூழ்நிலையில் திரையரங்கம் விட்டு வெளியேறும் புதியவர்கள் நடிக்கும் இது போன்ற படங்கள் இன்றைக்கு ஓடிடி தளத்தில் இந்திய அளவில் புகழ் பெறுவது இந்த இணைய உலகில் சாத்தியமாகிறது.

ஆள்பலம் நிறுவன பலம் ஏதுமற்ற தனிக்கலைஞன் நான். தங்களை நான் சந்தித்த காபி கடையின் வாட்ச்மேன் அய்யாவிடமும் வீட்ல இருக்கிற படிக்கிற பிள்ளைங்க கூட சேர்ந்து படத்த பார்த்து முகநூல்ல அவுங்க கருத்த எழுத சொல்லுங்க என்று சொல்லி விட்டு வந்தேன். அவரும் சொல்றேன் அய்யா என்றார்.

நாளையும் அவரிடம் இதை நினைவு படுத்தவும் நினைத்து இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இதை செய்வேன்.

 

மாஸ்கோ திரைப்பட விழா Red Carpet நடை முடிந்து எனது அங்கி பையில் வைத்திருந்த வடபழனி சிவா  பிரிண்டரில் அச்சிடப்பட்ட துண்டு பட விளம்பரத்தை அங்கிருப்பவர்களுக்கு தந்து என் படத்தை பார்க்க வருமாறு அழைத்தேன். அவர்கள் மறுதலிக்காமல் பெற்றுக்கொண்டனர்.

மக்களை சந்திக்கும் இப்பயிற்சிகளை நம்ம மதுரை  டவுன் ஹால் ரோட்டில் நிதி வசூல் செய்யும் பணிகளை தந்து என் கூச்சத்தை நீக்கிய தோழர்களை நன்றியோடு நினைக்காத நாளில்லை.

அடுத்து எனது 10 வது திரைப்படத்தின் பூஜைக்கு தங்களை அழைத்து வாழ்த்தும் பெறுவேன். தங்களை போன்றவர்களின் பதிவுகளாலும் மூத்த படைப்பாளிகளின் ஆசிகளாலும் முன் அறிமுகமில்லாத மக்களின் பதிவுகள் மற்றும் வாய் மொழியின் வழியே கோழிபண்ணை செல்லதுரை 10 கோடி+ நிமிடங்கள் Prime Video கடந்து முன்னேறிச் செல்வது மகிழ்ச்சி.

என் கவிதைகள் பற்றிய தங்களின் பதிவுக்கு காத்திருக்கும்,

அன்பன்
சீனு ராமசாமி ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

‘கலைஞர் 100 – வினாடி வினா’… கனிமொழிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? – ஷிண்டே பதில்!

மனைவினா அப்படியே உருகிவிடுவார் நவ்ஜோத் சித்து… காரணம் அப்படி ஒரு சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share