எண்பதுகளில், தொண்ணூறுகளில் பிறந்தவர்களில் பலர் எந்த அளவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களாக இருந்தார்களோ, அதே அளவுக்கு கார்த்திக் மீது அபிமானம் கொண்டிருந்தனர்.
குறிப்பாக, இளம்பெண்களிடம் அவருக்கான ஆதரவு அதிகமிருந்தது. அதனை அறுவடை செய்யும் வகையில் காதல், நகைச்சுவை கலந்த பல படங்கள் அக்காலகட்டத்தில் வெளியாகின.
அவற்றில் ‘கல்ட்’ அந்தஸ்துக்குரியதாகக் கருதப்பட வேண்டிய ஒரு திரைப்படம் ‘கோபுர வாசலிலே’. இந்தப் படத்தின் வழியாகத்தான் இயக்குநர் பிரியதர்ஷன் தமிழில் அறிமுகமானார்.
தமிழில் பிரியதர்ஷன்
’படயோட்டம்’ மலையாளப் படத்தில் ஒரு திரைக்கதையாசிரியராகத் தனது சினிமா வாழ்வைத் தொடங்கியவர் பிரியதர்ஷன். ‘குயிலினே தேடி’, ‘ஹலோ மெட்ராஸ் கேர்ள்’, ‘வனிதா போலீஸ்’ போன்ற மலையாளப் படங்களில் அவரது எழுத்தாக்கம் சிலாகிக்கப்பட்டது.
அதனை ஏணியாகக் கொண்டு அவர் ‘பூச்சக்கொரு மூக்குத்தி’, ‘ஓடருதம்மாவா ஆளரியான்’, ‘போயிங் போயிங்’ என்று பல வெற்றிப் படங்களின் இயக்குநராக அவர் மலையாளத் திரையுலகில் உலா வரத் தொடங்கினார். ’தாளவட்டம்’ அதில் உச்சம் தொட்டது.
ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மையக்கருவை எடுத்துக்கொண்டு, மலையாளத் திரைப்படங்களுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார் பிரியதர்ஷன்.
‘ரியாலிட்டி’யை மட்டுமே அதிகமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்த அக்காலத்து இயக்குநர்கள் மத்தியில் மலையாளத்தில் கமர்ஷியல் படங்களுக்கென்று இருந்த தேவையை அவரது படங்கள் எளிதாகப் பூர்த்தி செய்தன.
IPL 2024: ”எல்லாம் மாறும்” புது கேப்டனுக்காக வீடியோ வெளியிட்ட CSK
அப்படித்தான், அவர் தமிழிலும் படம் இயக்கும் வாய்ப்பினைப் பெற்றார். கார்த்திக், ரேகா நடிப்பில், வி.எஸ்.நரசிம்மன் இசையமைப்பில், பிரியதர்ஷன் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் ‘சின்ன மணிக்குயிலே’. 1987ஆம் ஆண்டு தயாரான அப்படம் சில காரணங்களால் வெளியாகவே இல்லை.
ஆனாலும் மு.க.தமிழரசு தயாரிப்பில் மீண்டும் கார்த்திக்கையே நாயகனாகக் கொண்டு ‘கோபுர வாசலிலே’ தந்தார் பிரியதர்ஷன்.
இம்முறை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் இளையராஜா, படத்தொகுப்பாளர் கோபாலகிருஷ்ணன் என்று ‘பக்கா’வான குழுவொன்றைத் துணையாகக் கொண்டு களம் கண்டார். 1991 மார்ச் 22 ஆம் தேதியன்று வெளியானது ‘கோபுர வாசலிலே’.
கலக்கலான கதை
நான்கு நண்பர்கள். அவர்களில் ஒருவரான மனோகர் கொஞ்சம் கட்டுப்பெட்டித்தனம் மிக்கவர். அவர்களில் அவரே வேலைக்குச் செல்பவர். அதனால் மற்ற மூன்று பேரும் அவரைச் சார்ந்து பிழைக்கும் நிலைமை.
மனோகரைத் தவிர மற்ற மூவரும் பெண்களைக் கிண்டலடிப்பது, அவர்கள் பின்னால் சுற்றுவது என்று வாலிபக் கிறக்கத்தோடு திரிபவர்கள்.
அவர்கள் பொறாமைப்படும்படியாக, ஒருநாள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் இளம்பெண்ணோடு ஒன்றாக இருக்கிறார். அதைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அவரை இம்மூவரும் மிரட்டுகின்றனர்.
அவர்களைக் குளிர்விக்கும் விதமாக, ’உங்களுக்குப் பிடித்த பெண்ணைக் காட்டுங்கள்; அவளைக் காதலிக்க வைக்கிறேன்’ என்கிறார் அந்த நபர். அதேபோல, அவர்கள் மூவரும் கல்யாணி என்ற பெண்ணைக் கைகாட்டுகின்றனர். அந்தப் பெண் வேறு யாருமல்ல, அந்த வயதானவரின் சொந்த மகள்.
ஆத்திரத்தின் உச்சத்தில் அவர் அவர்களைத் திட்டித் தீர்க்கிறார். அதன்பின்னும் அவர்கள் கல்யாணி பின்னால் சுற்றுவதால், போலீசில் புகார் செய்கிறார். மூவரும் கைதாகின்றனர்.
அந்த அவமானத்திற்குப் பழி வாங்க என்ன செய்யலாம் என்று அந்த மூன்று பேரும் யோசிக்கின்றனர். அந்த நேரத்தில், வீட்டில் அவர்களை மட்டம்தட்டிப் பேசுகிறார் மனோகர். உடனே அவர்கள் மனதில் ஒரு திட்டம் தயாராகிறது.
கல்யாணி மனோகரைக் காதலிப்பது போன்று ‘ஏமாற்று நாடகம்’ நடத்துவது என்றும், அதன் மூலமாக மனோகரிடம் பணம் கறப்பது என்றும் முடிவு செய்கின்றனர். கல்யாணி வேலை செய்யும் வங்கியில் பியூன் ஆக இருக்கும் பெத்தபெருமாள் அவர்களுக்கு உதவுகிறார்.
இந்த நிலையில், தற்செயலாக மனோகரைக் காணும் கல்யாணி மனதில் காதல் பூக்கிறது. மனோகருக்கும் அவ்வாறே நிகழ்கிறது. தாங்கள் நினைத்ததற்கு மாறாக நடக்கிறதே என்று மூன்று நண்பர்களும் சூழ்ச்சி வேலைகளில் இறங்குகின்றனர். அதனால் மனோகர்-கல்யாணி காதல் பிரிகிறது.
மனமுடைந்த மனோகர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் கிடைக்கிறது. கல்யாணி ஊரைவிட்டே சென்றுவிடுகிறார். ஐந்தாண்டுகள் கழித்து, மனோகரின் நண்பர்கள் மற்றும் பெத்தபெருமாளுக்குக் கல்யாணியின் கையெழுத்தில் கடிதமொன்று அனுப்பப்படுகிறது.
Weekend Movies: திரையரங்குகள், ஓடிடி-யில்… இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள்!
அதில் குறிப்பிடப்பட்ட இடத்தை நோக்கி அவர்கள் பயணிக்கின்றனர். அதன்பிறகு என்னவானது என்பதுதான் இப்படத்தின் கிளைமேக்ஸ். மனோகர் நண்பர்களை ரயில்வே நிலையத்தில் பெத்தபெருமாள் தேடித் திரிவதாகத்தான் ‘கோபுரம் வாசலிலே’ திரைக்கதை தொடங்குகிறது.
உண்மையைச் சொன்னால் ரொமான்ஸ், காமெடி, த்ரில் என்று பல சுவைகள் நிறைந்த ‘கலக்கலான’ கதை இது. ‘பாவம் பாவம் ராஜகுமாரன்’ என்ற பெயரில் சீனிவாசன் எழுத்தாக்கத்தில், கமல் இயக்கி வெளியான மலையாளப்படத்தின் ரீமேக் இது.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் டைட்டில் காட்சியே கலக்கலாக ஆரம்பிக்கும். ஊட்டி மலை ரயில் பாதையில் ஒரு குகைக்குள் ரயில் நுழைவதும், அது வெளிச்சத்தைக் காண்பதற்கு முன்னதாக ‘இசை – இளையராஜா’ என்ற பெயர் திரையில் ஒளிர்வதும், அப்போது பின்னணியில் ஒலிக்கும் இசை தடம் மாறுவதும் அழகான சினிமா அனுபவத்தைத் தரும்.
ஹிட் பாடல்கள்
’நாதம் எழுந்ததடி’, ‘பிரியசகி’, தேவதை போலொரு பெண்’ ‘தாலாட்டும் பூங்காற்று’, ‘காதல் கவிதைகள்’, ‘கேளடி என் பாவையே’ என்று இந்த படத்தில் இளையராஜா தந்த ஆறு பாடல்களும் ஆறுவிதமான சுவைகளைக் கொண்டிருக்கும்.
ஒவ்வொன்றும் என்றென்றும் ஆராதிக்கத்தக்க தரத்தில் அமைந்திருக்கும். கார்த்திக், பானுப்ரியா இருவரும் எண்பதுகளின் பிற்பாதியில் நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ‘குளோஸ்’ செய்த சீரியல் நடிகை… பின்னணி என்ன?
ஆனால், அவர்களைப் பொருத்தமான ‘ரீல் ஜோடி’யாக காட்டிய படங்களில் முக்கியமானது ‘கோபுர வாசலிலே’. இருவருமே காதல், செண்டிமெண்ட், ரொமான்ஸ் மட்டுமல்லாமல் சோகமான நடிப்பிலும் வெளுத்துக் காட்டிய படம் இது.
எங்கே சறுக்கல்
திரைக்கதை நேர்த்தியும் கதாபாத்திர வார்ப்பும் சிறப்பான காட்சியாக்கமும் இதர தொழில்நுட்ப அம்சங்களும் இணைந்திருந்தும் ‘கோபுர வாசலிலே’ மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்ததாகத் தகவல் இல்லை.
காரணம், இப்படத்தின் கதையம்சம் அப்போதைய தமிழ் திரைப்படங்களில் நாயகனின் நண்பர்களைக் காட்டிய விதத்தில் இருந்து வேறுபட்டிருந்தது.
சார்லி, ஜுனியர் பாலையா போன்றவர்கள் நாயகன் காதல் வசனம் பேசும்போது ‘ஆமாம்பா’, ‘கரெக்டுப்பா’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள். அவர்களை வில்லத்தனமாகக் காட்டியிருந்தார் பிரியதர்ஷன்.
Padai Thalaivan: சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்
’நண்பர்களே எப்படி உடனிருப்பவனுக்குத் துரோகம் செய்வார்கள்’ என்ற எண்ணம் ரசிகர்களிடம் நிறைந்திருந்த காரணத்தால் நாசர், சார்லி, ஜுனியர் பாலையா ஆகியோர் ஜனகராஜோடு சேர்ந்து செய்த காமெடி கலாட்டாக்கள் எடுபடவில்லை.
அது மட்டுமல்லாமல் பானுப்ரியா பாத்திரம் அவர்களைக் கடிதம் எழுதி வரவழைப்பதாக அமைந்த தொடக்கமும் ரசிகர்களிடத்தில் ஒருவகையில் அருவெருப்பை ஏற்படுத்தியது.
வழக்கத்திற்கு மாறாக ’ஜொள்ளுவிடும் பெருசு’ ஆக வி.கே.ராமசாமி நடித்ததையும் அவர்கள் ஏற்கவில்லை. ஆனால், இந்த அம்சங்களே மலையாளத்தில் இக்கதையை ‘ஹிட்’ ஆக்கியது என்பது வினோதமான முரண்.
உண்மையைச் சொன்னால், இன்றைய தேதியில் ‘கோபுர வாசலிலே’ திரைப்படமாக வெளியானால் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதே கதையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்றைய ரசிகர்களிடத்தில் உருவாகியிருக்கிறது.
‘குண்டா இருக்குறவன் சூது வாது இல்லாதவன்’, ‘செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போன்ற கற்பிதங்களை வடிவேலுவுக்கு முன்பாகவே பல நகைச்சுவை ஜாம்பவான்கள் சுக்கல்சுக்கலாக உடைத்தெறிந்து விட்டார்கள் என்பது அதற்கொரு காரணமாக அமையும்.
இப்போதைய சூழலில் இப்படத்தை ‘ரீரிலீஸ்’ செய்யலாம் அல்லது தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப ‘ரீமேக்’ செய்யலாம். 33 ஆண்டுகள் கடந்தபிறகும் தனக்கான ‘கல்ட்’ அந்தஸ்தை எட்டியிருக்கும் ‘கோபுர வாசலிலே’, அதற்கேற்ற அத்தனை தகுதிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது..!
-உதய் பாடகலிங்கம்
விருதுநகரில் விஜய பிரபாகர்: தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
கெஜ்ரிவால் வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவிற்கு 30 கோடி கொடுத்தது அம்பலம்!
Comments are closed.