விஜய் நடித்த வில்லு, அஜித் நடித்த ஏகன், ஜெயம் ரவி நடித்த பேராண்மை, நந்தலாலா உட்பட இதுவரை 24 படங்களைத் தயாரித்த நிறுவனம், ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்.
திரைப்பட விநியோகத் தொழிலில் சர்வதேச அளவில் 35 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், 2,500க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமைகளை வாங்கி வெளியிட்டுள்ளது. லைகா நிறுவனம் தமிழில் படங்களை தயாரிக்க அடிப்படை காரணமாக இருந்தவர் ஐங்கரன் கருணாமூர்த்தி. சில ஆண்டுகளாகப் படத்தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபடவில்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிறுவனம் தயாரிக்கும் 25ஆவது படத்தின் அறிவிப்பை 2022ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி வெளியிட்டு, நேற்றைய தினம் ‘நிறங்கள் மூன்று’ என்று பெயரையும் அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை, துருவங்கள் பதினாறு, மாஃபியா, தனுஷ் நடிப்பில் இன்னும் வெளிவராமல் இருக்கும் மாறன் ஆகிய படங்களை இயக்கியுள்ள கார்த்திக் நரேன் இயக்குகிறார்.
அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஜனவரி 5ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி மார்ச் மாதம் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
**-இராமானுஜம்**