நவரச நாயகனாகக் கொண்டாடப்பட்ட கார்த்திக் தனது திரைவாழ்வில் அடுத்தடுத்து பல வெற்றி, தோல்விகளைக் கண்டவர். karthick sundara pandiyan
சில நேரங்களில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு மாபெரும் வெற்றிப்படம் கொடுத்த அனுபவங்கள் அவரிடத்தில் உண்டு. அப்படிப்பட்ட கார்த்திக் நடித்த ஒவ்வொரு படமும் அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை ‘பொக்கிஷம்’ போன்றது. அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுவது ‘சுந்தரபாண்டியன்’.
உடனே சசிகுமார், லட்சுமி மேனன், சூரி நடித்த ‘சுந்தர பாண்டியன்’ திரைப்படம் 2012ஆம் ஆண்டில் அல்லவா வந்தது என்று கேட்கக்கூடாது.
மேற்சொன்ன திரைப்படம் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 20அன்று வெளியானதாகச் சொல்கிறது விக்கிபீடியா. ஆனால், இப்படத்தைத் தயாரித்து இயக்கிய ஆர்.ரகு ‘இப்படத்தைத் தன்னால் குறித்த நேரத்தில் வெளியிட முடியாத காரணத்தால் சில சிக்கல்களை எதிர்கொண்டதாக’ சினிமா பிரபலமான சித்ரா லட்சுமணனுக்கு அளித்த வீடியோ பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
’சுந்தர பாண்டியன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்யத் தாமதமானதாகவும், அதன்பிறகு தணிக்கையில் சில ஷாட்கள், வசனங்கள், காட்சிகள் நீக்கப்பட்டதால் ‘ட்ரிப்யூனல்’ வரை சென்றதாக அப்பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ரகு.

ஒருவழியாகத் தணிக்கை முடிந்து சரியான ஒரு நாளில் படத்தை வெளியிடக் காத்திருந்ததாகவும், அதற்குள் இலங்கை உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இப்படத்தின் வீடியோ கேசட் வெளியாகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அதன்பிறகும் நீதிமன்ற வழக்குகளால் அப்படத்தின் வெளியீடு தாமதமானதாகச் சொல்லியிருக்கிறார்.
அதேநேரத்தில், எந்த தேதியில் அப்படம் தியேட்டர்களில் வெளியானது என்று உறுதிபடச் சொல்லவில்லை.
தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘ஜக்குபாய்’, விஜய் தேவரகொண்டா நடித்த தெலுங்கு படமான ‘டாக்ஸிவாலா’ உள்ளிட்ட சில படங்கள் இதே போன்ற சிக்கலை வெவ்வேறு காலகட்டங்களில் எதிர்கொண்டிருக்கின்றன. தியேட்டர் வெளியீட்டுக்கு முன்னதாகவே இணையத்தில் ‘கசிந்து’ வெற்றியின் சதவீதத்தைத் தவறவிட்டிருக்கின்றன.

மேற்சொன்ன ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் கார்த்திக் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். சுந்தர், பாண்டி என்ற இரு பாத்திரங்களை அவர் ஏற்றிருப்பார். ரஜினிகாந்த் நடித்த ‘ராஜாதிராஜா’ படத்தைக் கொஞ்சமாய் ‘பட்டி டிங்கரிங்’ பார்த்தது போன்று இப்படத்தின் கதை அமைந்திருக்கும்.
சுவாதி, ஹீரா இருவரும் நாயகிகளாக நடித்திருப்பர். இதில் வடிவேலு உடன் கார்த்திக் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டிருக்கின்றன.
பாரதி விஷ்ணுவர்தன், மணிவண்ணன், அலெக்ஸ், வாசு விக்ரம், காந்திமதி, சி.ஆர்.சரஸ்வதி, ஜுனியர் பாலையா, குமரிமுத்து உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். தேவா இதற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்திற்காகத் தேவா தந்த ஐந்து பாடல்களில் ‘கும்பிடப்போன தெய்வம் என் முன்னால வந்ததடி ராமாயி’ பாடல் இன்றளவும் சில ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பேட்டியில் கார்த்திக்கின் சிறப்பு பற்றிப் பேசும்போது, ‘நடிகர் திலகம் சிவாஜியின் தாக்கம் சிறிதும் இல்லாமல் தமிழில் நடித்த ஒரே நாயகன் கார்த்திக் மட்டுமே’ என்று கூறியிருந்தார். கேட்கப் புதிதாக இருந்தாலும், யோசித்துப் பார்த்தால் அதுவே சரியென்று தோன்றுகிறது. அவரது நடிப்பில், அவரது தந்தை முத்துராமன் உட்பட எந்த நடிகரின் சாயலையும் நாம் காண முடியாது.
இன்றும் கார்த்திக்கின் நடிப்பைச் சிலாகிக்க, சுந்தரபாண்டியன் போன்று திரை வரலாற்றில் நழுவிப்போன திரைப்படங்களைச் சில ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள அதுவே காரணமாக இருந்து வருகிறது. karthick sundara pandiyan
