பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகப் படத்தின் நாயகன் கார்த்தி தெரிவித்துள்ளார்.
ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டது. பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்த நிலையில், தற்போது கொரோனா தளர்வினால் மீதியிருந்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
இதுகுறித்து கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையை கேட்ட நாள் முதல் இன்றுவரை, எங்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் நடித்ததிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இது. கடின உழைப்புடன் சிறந்த பங்களிப்பைக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
