கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்துக்கு தடை!

Published On:

| By Kavi

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. 

ADVERTISEMENT

இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி திரைக்கு வரும் என்று பட குழு அறிவித்தது. 

இந்த சூழலில் தான் இந்த படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையைச் சேர்ந்த அர்ஜுன் லால் சுந்தரதாசிடம் விஐபிகள் பலர் கோடிக்கணக்கில் பணம் தந்திருந்தனர். அந்த பணத்தை அவர் பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். ஆனால் நிதி இழப்பு ஏற்பட அவர் திவால் ஆனவராக அறிவிக்கப்பட்டார். 

பின்னர் அவர் இறந்து விட்டதால் அவரது சொத்துகளை சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் சொத்தாட்சியர் என்று அழைக்கப்படும் அலுவலகம் நிர்வகித்து வருகிறது. 

ADVERTISEMENT

அந்த வகையில் அர்ஜுன் லாலிடம் ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான ஞானவேல் ராஜா ரூ.10 கோடிகடன் வாங்கியிருந்தார். 

தற்போது வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருகிறது. எனவே இந்த பணத்தை கொடுத்தால் தான் ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக ஞானவேல் ராஜா பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் எம்.எஸ் சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் ஒத்திவைத்தனர்.

அதன்படி வழக்கு இன்று (டிசம்பர் 10) விசாரணைக்கு வந்த போது, சொத்தாட்சியர் சார்பில் நீதிமன்றம் பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா கடனை திருப்பி அளிக்கவில்லை அவரது சொத்துகளை முடக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

ஞானவேல் ராஜா சார்பில், மூன்று கோடியே 75 லட்சம் ரூபாயை 24 மணி நேரத்தில் செலுத்துவதாகவும் மீதமுள்ள தொகைக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “உங்களுக்கு ஏற்கனவே பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டுவிட்டது. அர்ஜுன் லால் சுந்தரதாசியிடம் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வரை ‘வா வாத்தியார்’ படத்தை ரிலீஸ் செய்ய கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படங்கள் இதுபோன்று நிதி சிக்கல் காரணமாக, தாமதமாக வெளியாவது தொடர்கதையாகி வருகிறது. 

ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா, விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் போன்ற படங்கள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share