அன்பே நிரந்தரம் என்று சொல்லும் படம்!
’96’ படம் மூலமாகத் தமிழ் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குனர் பிரேம்குமார். அதற்கு முன்னர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்படச் சில படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினாலும், அப்படமே அவரது அடையாளமாகிப் போனது.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கார்த்தி, அர்விந்த் சுவாமியைப் பிரதான பாத்திரங்களில் நடிக்க வைத்து, அவர் தந்திருக்கும் படமே ‘மெய்யழகன்’.
உறவுகள் என்பது சிக்கல் சிடுக்கல்களைத் தாண்டி என்றென்றும் நம் வாழ்வுப் பயணத்தில் உடன் வருவது என்று சொல்வதாக அமைந்தது இப்படத்தின் ட்ரெய்லர். இப்படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறதா? இது தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
மீட்டெடுக்கப்படும் நினைவுகள்!
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அறிவுடை நம்பி (ஜெயபிரகாஷ்). ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மனைவி (ஸ்ரீ ரஞ்சனி), மகன்களுடன் தனது பூர்வீக வீட்டில் வசிக்கிறார். சொத்து பிரச்சனையில் அந்த வீடு அறிவுடைநம்பியின் சகோதரிகள் குடும்பத்தினருக்குச் செல்கிறது. அதனால், ஒரே இரவில் அந்த வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியேறுகிறது அவரது குடும்பம்.
அது, இளம்பருவத்தில் இருக்கும் அவரது மகன் அருள்மொழி வர்மனைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதன்பின்னர் அவரோ, அவரது தந்தையோ, சகோதரரோ அப்பக்கமே வரவில்லை. நட்புகள், சொந்தபந்தங்கள் சம்பந்தப்பட்ட நல்லது கெட்டதுகளிலும் கலந்துகொள்ளவில்லை.
2018ஆம் ஆண்டு, மீண்டும் அந்த ஊருக்குச் செல்கிறார் அருள்மொழி வர்மன் (அர்விந்த் சுவாமி). சித்தப்பா மகள் புவனாவின் (சுவாதி கொண்டே) வற்புறுத்தலால், அவரது திருமணத்தில் பங்கேற்பதே அந்தப் பயணத்தின் நோக்கம்.
அதுவும் திருமண வரவேற்பில் தலைகாட்டிவிட்டு, சில மணி நேரங்களில் அந்த ஊரில் இருந்து ‘எஸ்கேப்’ ஆக வேண்டுமென்று நினைக்கிறார். ஆனால், அது நிகழவில்லை. அதற்குக் காரணம், ஒரு நபர். அந்த நபரை (கார்த்தி) அருள்மொழிவர்மனுக்குத் தெரியவில்லை. ஆனால், அவருக்கு அருள்மொழி பற்றி எல்லாமே தெரிந்திருக்கிறது.
’நெருங்கிய சொந்தங்கள் செய்த துரோகத்தினால் வாழ்ந்து கெட்ட குடும்பமாகிவிட்டோம்’ என்கிற எண்ணம், அருள்மொழியின் கடந்த காலத்தை ‘இறந்த காலமாக’ மாற்றியிருக்கிறது. அதனால், அவர் பல விஷயங்களை நினைவுபடுத்தவும் விரும்புவதில்லை.
ஆனால், அந்த நபர் அந்த எண்ணங்களைத் தவிடுபொடியாக்குகிறார். பல ஆண்டுகளாக இறுகியிருக்கும் அவரது முகத்தில் சிரிப்பை விதைக்கிறார். மீண்டும் அவரை அவருக்கே அடையாளம் காட்டுகிறார். கூடவே, ‘சொந்தபந்தங்கள் இக்கட்டான நேரத்தில் தோள் கொடுக்கும்’ என்று உணர வைக்கிறார். அது மட்டுமல்லாமல், அருள்மொழியைத் தனது ஆதர்சமாக இத்தனை ஆண்டுகாலமும் கொண்டாடி வந்திருக்கிறார்.
இந்த உண்மையெல்லாம் தெரியவந்தபிறகு அருள்மொழியை வெட்கம் பிடுங்கித் தின்கிறது. இதற்குப் பிறகாவது, ‘நீங்கள் யார்’ என்று அந்த நபரிடம் கேட்டாரா? அவர் யார் என்பதைத் தானாக உணர்ந்து தெளிந்தாரா? சென்னையில் இருந்து தஞ்சாவூருக்குக் கிளம்புகிறபோது அவர் மனதில் இருந்த தெளிவின்மையும் கொதிப்பும் அடங்கியதா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
முழுப்படமும் அருள்மொழிவர்மன் எனும் நபர் தனது நினைவுகளை மீட்டெடுப்பதைச் சொல்கிறது. அதன் வழியே, இந்தக் கதையில் ‘மெய்யழகன்’ எனும் டைட்டிலுக்கு என்ன வேலை என்பதும் சொல்லப்படுகிறது.
வித்தியாசமான அனுபவம்!
திருப்புமுனை நிகழ்வு, அதனால் ஏற்படும் பிரச்சனைகள், தீர்வு தொடங்குமிடம் என்று கமர்ஷியல் படங்களின் கதைகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுவது, ஒரு இயக்குனர் திரையில் கதையில் சொல்வதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால், வாழ்வைப் பிரதிபலிக்கிற திரைப்படங்களில் அந்த பார்முலாவுக்கு வேலை இல்லை. அதுவே, ‘மெய்யழகன்’ படத்திற்கும் பொருந்தும்.
வீட்டைத் துறந்து நள்ளிரவில் ஒரு குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்வதில் இருந்து தொடங்குகிறது ‘மெய்யழகன்’ திரைக்கதை. அக்காட்சிகளின் நகர்வே, அடுத்துவருபவை எப்படியிருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதுவே, ’இந்த படத்தைப் பார்ப்பதா, வேண்டாமா’ என்பதைத் தீர்மானிக்க வைப்பதாக விளங்குகிறது.
அந்த கட்டத்தைக் கடந்துவிட்டால் போதும். படம் பார்க்க வந்த ஒருவர் சிரிக்க, ரசிக்க, அழ, நெகிழ்ச்சியடைய, பொரும, பொங்கியெழப் பல தருணங்களை இத்திரைக்கதையில் நிறைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.
‘பருத்திவீரன்’, ‘மெட்ராஸ்’ டைப்பில் யதார்த்தத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுவதாகட்டும்; ‘நான் மகான் அல்ல’ போன்ற கமர்ஷியல் படங்களில் மிகச்சரியாகப் பொருந்துவதாகட்டும்; ‘சிறுத்தை’ போன்ற ‘மசாலா’ படங்களில் ஒரு நட்சத்திரமாக மிளிர்வதாகட்டும்; இப்படி தனது எல்லை எது என்று உணர்ந்து நடித்துவரும் கார்த்தி, மிக யதார்த்தமான குடும்பப் படமொன்றில் தன்னிருப்பை வெளிப்படுத்த விரும்பி இதில் நடித்திருக்கிறார். அது, அவரது நடிப்பு பாணியோடு இயைந்திருப்பது நல்ல விஷயம்.
இந்தப் படத்தின் ஆதார மையம் அர்விந்த் சுவாமி பாத்திரத்தைச் சுற்றியே வலம் வருகிறது. அதற்கேற்ப, நம்மை நெகிழ்வு சூழ் உலகுக்குள் தள்ளுகிறது அவரது நடிப்பு.
’எத்தனை அத்தான்’ என்று ராஜ்கிரணைக் கிண்டலடிக்கிற இடமானாலும் சரி; ‘பேசாம உன்னையே கல்யாணம் பண்ணியிருக்கலாம்’ என்கிற இந்துமதியைப் பார்த்து அதட்டுகிற இடத்திலும் சரி; ஸ்வாதி கொண்டேவின் கால்மாட்டில் அமர்ந்து கொலுசு மாட்டிவிடும்போது அழுவதிலும் சரி; கார்த்தியோடு இணைந்து ‘இந்த மான் எந்தன் சொந்தமான்’ பாடலைப் பாடுவதிலும் சரி; நம் மனதில் விதவிதமான உணர்வுகளை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் அவரது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு மைல்கல்.
ராஜ்கிரண், இளவரசு, கருணாகரன், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி, ஷரண் சக்தி, ஸ்வாதி கொண்டே, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், ரேச்சல் ரெபேக்கா என்று பலர் இப்படத்தில் உண்டு. இவர்களது பெர்பார்மன்ஸை ‘சூப்பர்’ என்று ஒரு வார்த்தையில் அடக்குவது கடினம்.
இவர்களைத் தாண்டி ஜல்லிக்காட்டுக் காளைகள், ஆறு, பழைய வீடுகள் என்று இக்கதையில் மேலும் சில பாத்திரங்கள் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் மற்றும் ஆடை வடிவமைப்பு, வண்ணக்கலவை, ஒலி வடிவமைப்பு என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பினால் இப்படம் ஒரு திரைப்படமாக உருமாறியிருக்கிறது. எந்தவொரு இடத்திலும் ‘சீரியல் போலிருக்கிறதே’ என்ற எண்ணம் எழவே இல்லை.
முக்கியமாக, கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை முன்பாதியில் கண் கலங்கக் காரணமாக இருக்கிறது.
‘யாரோ இவர் யாரோ’, ‘போறேன் நான் போறேன்’, ’டெல்டா கல்யாணம்’ உள்ளிட்ட பாடல்களும் வழக்கத்திற்கு மாறான அனுபவங்களைச் செவிக்குத் தருகின்றன.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரேம்குமார். முந்தைய படத்தில் பலரது கடந்த காலக் காதல் நினைவுகளை மீட்டெடுத்தவர், இதில் உறவுகள் குறித்த நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்திருக்கிறார்.
இந்தப் படத்தின் காட்சிகள் நம்மில் பலர் வாழ்வில் உணர்ந்தவையாக இருக்குமென்றாலும் கூட, அதையும் தாண்டி சில காட்சிகள் புதிதாக இருக்கின்றன. கார்த்தி பாத்திரப் பெயர் தெரியாமல் அர்விந்த் சுவாமி சமாளிக்கிற காட்சிகள் அனைத்தும் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றன.
குறிப்பாக, அரவிந்த் சுவாமியும் கார்த்தியும் போனில் பேசுகிற காட்சி மிக வித்தியாசமானது. அதேநேரத்தில், அதன் நீளம் நம்மில் ‘கொட்டாவிகளை’ வரவழைக்கக் கூடியது. கொஞ்சம் சரிந்தால் ‘போரடிக்கிற படம்’ என்கிற எல்லையைத் தொடுகிற விவரணைகள் இதிலுண்டு.
ஸ்வாதியின் பாத்திரம் அர்விந்த் சுவாமிக்கு சித்தப்பா பெண்ணா, சித்தி பெண்ணா என்பது புரியாத அளவுக்கு ‘குழப்படியாக’ இதில் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது போன்ற சில குறைகள் இதில் இருக்கின்றன.
மிக முக்கியமாக, சொந்த ஊரை, பூர்விக வீட்டை, சில பிரச்சனைகளால் நெருங்கிய உறவுகளை விட்டு விலகியிருப்பவர்களை இப்படம் கதறியழச் செய்யும். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
இந்த கதையும் கதை சொல்லலும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதா என்பதற்குப் பதில் சொல்ல முடியாது. அதையும் மீறி, ‘மனிதராகப் பிறந்த எல்லோரும் அழக்கூடியவர்கள் தானே’ என்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். ‘மெய்யழகன்’ படத்தின் பலமும் பலவீனமும் அதுவே.
அனைத்துக்கும் மேலே, நிஜ வாழ்வில் நாம் சந்தித்த, சந்திக்கிற, சந்திக்கவிருக்கிற ‘மெய்யழகன்களை’ மனக்கண்ணில் காட்டுகிறது இப்படம். அந்த மெய்யழகன்கள் எப்படியிருப்பார்கள்? அன்பே இந்த உலகில் நிரந்தரம் என்று எண்ணுபவர்களாக, செயல்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் ‘டைனசர்கள்’ போல அரிதானவர்கள் என்றாலும், அவர்களால்தான் வாழ்வின் ஓட்டத்தில் நம்மை தொலைத்த இடத்தில் நாம் கண்டெடுப்போம் என்று சொன்ன வகையில் ‘சிறப்பிடம்’ பெறுகிறது ‘மெய்யழகன்’!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜி மாரிஸ் ஹோட்டலில் தங்கும் மர்மம்!
சென்னை திரும்பிய ஸ்டாலின்… காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற செந்தில் பாலாஜி