அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு சென்று தமிழகத்திற்கு திரும்பும் கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களிடம் அடாவடியாக வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர் அம்மாநில டிராபிக் போலீசார்.
தமிழகத்திற்கு அருகில் உள்ள அம்மாநில தலைநகரான பெங்களூரு சென்று மீண்டும் தமிழகத்தை நோக்கி திரும்பும் வழியில் மடிவாளா சந்திப்பு உள்ளது. அங்குள்ள சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறும் பகுதியில் பணத்தை வசூலிக்கும் 10 டிராபிக் போலீஸார் எப்போதும் கும்பலாக நிற்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீ தூரம் மட்டுமே உள்ள இந்த பகுதியில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி கார்களை பார்த்தாலே ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அபராதம் என்ற பெயரில் காசை கறாராக வாங்கி குவிக்கின்றனர் கர்நாடகா போலீசார்.
கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் என்றால் ரூ.4,500, பெல்ட் போடவில்லை என்றால் ரூ.5,000, அதில் பேரம் பேசினால் ஒரு 1000, 500 குறைத்து கருணை கர்ணன்களாக மாறி வசூல் செய்கின்றனர்.

இந்த நிலையில் தான் நேற்று (ஆகஸ்ட் 29) மதியம் 1.45 மணியளவில் திருவள்ளூரைச் சேர்ந்த சிவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெங்களூரு விமானநிலையம் சென்று திரும்பும்போது, மடிவாளா பகுதியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் நின்று அவரது காரை மடக்கினர்.
கதவை திறக்க சொல்லியவர்கள் ’கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிருக்கீங்க’ என சொல்லி, அபராதமாக ரூ.4,500 கேட்டுள்ளனர். அவ்வளவு பணம் இல்லை என்ற அவரை ஓரமாக நிற்க கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர் நம்மிடம் வேதனையுடன் கர்நாடகா வசூல் ராஜாக்களின் அடாவடி சேட்டையை பற்றி கூறுகையில்,
”என் காருக்கு பின்னால் TN 23 – 7777 பதிவெண் கொண்ட அதிமுக கொடி கட்டிய கார் வந்தது. அதில் கருப்பு ஸ்டிக்கர் இருப்பதாக கூறி ரூ.4,500ஐ அபராதமாக கேட்டார்கள். அந்த கார் ஓட்டுநர், ‘சார் இது எம்.எல்.ஏ கார்’ என்று கூறினார். அதற்கு, ”யார் காரா இருந்தா என்ன? பணத்தை குறைக்க முடியாது. பணத்தைக் கொடு இல்லையென்றால் கோர்ட்டுக்கு போய் தான் அபராதம் கட்ட வேண்டும். அதுவரைக்கும் வாகனத்தை விட முடியாது” என கண்டிப்புடன் கூறியுள்ளனர். பின்னர் நடந்த பேரத்தில் ரூ.3,000 வாங்கிக்கொண்டு, அந்த காரை அனுப்பி வைத்தனர்.
அடுத்து கேரளா பதிவெண் கொண்ட டாடா அல்ட்ரக்ஸ் காரை காரணமே இல்லாமல் நிறுத்தி ரூ.4,500 கேட்டார்கள். அந்த காரின் உரிமையாளர் ’குடும்பத்துடன் வந்திருக்கிறோம். எங்களை விடுங்கள்’ என்று எவ்வளவோ கெஞ்சியும், பணத்தை பெற்றுக்கொண்ட பிறகே இன்முகத்துடன் காரை அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாஜிஸ்திரேட் போர்டு போட்ட கார் ஒன்று வந்தது, அதனை போலீசார் மடக்கி நிறுத்தியதும், கார் ஓட்டுநர் இறங்கி வந்து, ’நீதிபதி அம்மா காரில் உட்கார்ந்திருக்காங்க’ என்றார். அதற்கு “யாரா இருந்தா என்ன? ரூ.500 வேண்டுமானால் குறைச்சிக்கோ” என்று பெருந்தன்மையுடன் கூறி ஓட்டுநரிடம் ரூ.2000 வாங்கிக்கொண்டு சலாம் போட்டு அனுப்பி வைத்தனர்.
அதற்கு பின்னால் இன்னொரு வண்டி வந்தது. அந்த கார் ஓட்டுநரிடம் ரூ.2000 கேட்டார்கள். ’கையில் காசுல இல்ல ஜிபே தான் இருக்கு’ என்றதும், அருகில் இருந்த ‘Good Wines’ என்ற ஒயின்ஷாப்பை கைக்காட்டி, ’அங்கே சென்று ஜிபே பண்ணு, அவங்க காசு தருவாங்க. அத வாங்கி கொடுத்துட்டு போ” என்று ஒரு போலீஸ் கூறினார்.
அவரிடம் ”சார் நான் 1500 தான் தருவேன்” என்ற கூற, அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். இதனையடுத்து நேராக ஒயின்ஷாப் சென்று விவரத்தை கூறியபோது, அங்கிருந்த கடை ஊழியர் தன் பங்கிற்கு ரூ.50 கமிஷன் கேட்டிருக்கிறார். இதனையடுத்து ஜிபேயில் ’கரான்ஜி வைன்ஸ்’ என காட்டிய அந்த ஒயின்ஷாப்புக்கு ரூ.1,550 ஜிபே பண்ணியதும், ஊழியர் 1,500 ரூபாயை வாங்கி போலீசிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
கடைசியாக ’சார் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, ஜிபேவில் 1000 தான் இருக்கிறது’ என நான் சொன்னதும், வழக்கம்போல அந்த ஒயின்ஷாப்பை கைக்காட்டினர். நானும் அங்கு சென்று கமிஷனுடன் ரூ.1050 செலுத்திவிட்டு, ஒயின்ஷாப் ஊழியர் தந்த ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் கொடுத்துவிட்டு, காரை எடுத்துகொண்டு நகர்ந்தேன்.

இப்படி மடிவாளா பகுதியில் மட்டும் ஒரு நாளுக்கு ரூ. 5 லட்சத்திற்கு குறையாமல் வசூல் வேட்டை நடத்துகின்றனர் இந்த டிராபிக் வசூல் ராஜாக்கள். பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வண்டியை குறிவச்சு தான் அவர்கள் இந்த வழிப்பறியை செய்கிறார்கள்.
இதற்கிடையே, இந்த பகல் கொள்ளையை அருகில் இருந்து பார்த்த நான், அங்கிருந்த ஒரு போலீசாரிடம், “அதென்ன சார் தமிழ்நாடு வண்டியை மட்டும் பிடித்து அபராதம் போடுகிறீர்கள்? ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “தமிழ்நாட்டில் கர்நாடகா வண்டி வந்தா மட்டும் விட்ருவீங்களா. அங்கே இங்கே என நினைத்த இடத்தில் எல்லாம் உங்க போலீஸ் அபராதம் போட்டு வசூல் பண்றாங்க தெரியுமா? அவங்களுக்கு நாங்க எவ்வளவோ மேல். ஒரே இடத்துல தான் வசூல் பண்றோம்” என்று கூறிவிட்டு தொடர்ந்து தங்களது வசூலுக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் அடுத்த தமிழ்நாட்டு வண்டிக்காக காத்திருந்தார் அந்த போலீஸ்.
