கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 21 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்தது தொடர்பாக ஆய்வு செய்ய அம்மாநில அரசு குழு அமைத்துள்ளது. Karnataka Heart Attack Deaths
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் மாரடைப்பு மரணங்கள் திடீரென அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி வரை 17 பேர் ஹாசனில் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஜூன் 30-ந் தேதி மட்டும் ஹாசன் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மாரடைப்பால் இறந்தனர். இதையடுத்து ஹாசனில் ஒரே மாதத்தில் மாரடைப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
மேலும் சித்ரதுர்கா, தும்கூரு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மாரடைப்பு மரணங்கள் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
இதனால் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய கர்நாடகா மாநில அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. பெங்களூருவில் உள்ள பிரபல ஜெயதேவா இதயநோய் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரவீந்தரநாத் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பெங்களூருவில் ஜெயதேவா இதயநோய் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தங்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா? என முன்கூட்டியே உடல் பரிசோதனை செய்வதறகாக மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
