கர்நாடகத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் எலிகள் தொல்லை அதிகமானதால் பூனைகள் வளர்க்க அந்த காவல் நிலைய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
வீடுகளில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்தால் பூனைகள் வளர்க்கப்படுவது வழக்கம். அதேபோன்று தற்போது கர்நாடகத்தில் சிக்கபலாபுரா மாவட்டம் கவுரி பிதனூர் காவல் நிலையத்தில் எலிகளின் தொல்லை அதிகமானதால் அங்குள்ள அதிகாரிகள் பூனைகளை வளர்க்க முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே ஒரு காவல் நிலையத்தில் பூனையை வளர்ப்பது இதுவே முதன்முறையாகும். அந்தக் காவல் நிலையத்தில் எலி தொல்லையால் பல ஆவணங்கள் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எலி தொல்லை முதலில் ஆரம்பித்தபோது எலிப்பொறிகளை வைத்து காவல் அதிகாரிகள் சமாளிக்க தொடங்கினர். ஆனால், எலிகளின் தொல்லை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் அந்தக் காவல் நிலையத்தில் எலிகள் பல வழக்கு ஆவணங்களை சேதப்படுத்தியது. அதில் சில முக்கிய வழக்குகளின் ஆவணங்களும் சேதப்படுத்தப்பட்டதால் அந்த காவல் நிலைய அதிகாரிகள் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் எலி தொல்லையைச் சமாளிக்க பூனைகளை வளர்க்க முடிவு செய்து, இரண்டு பூனைகள் தற்போது காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தக் காவல் நிலையத்தில் அளித்த புகார்கள் எப்போதும் அதிகமாகவே இருக்கும். அதைக் கட்டுப்படுத்த நாங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், சில முக்கிய வழக்குகளின் ஆவணங்களை எலிகள் சேதப்படுத்தியதால் நாங்கள் கடும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தற்போது எலிகளின் தொல்லையைச் சமாளிக்க இரண்டு பூனைகளை வளர்க்க ஆரம்பித்தோம். தற்போது எலிகளின் தொல்லை குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
