தமிழகம், மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகா… நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்!

Published On:

| By Selvam

தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஜூலை 25) சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தநிலையில், நீட் தேர்வுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது.

இந்தநிலையில், கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்தததாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், மறுதேர்வு நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து, கர்நாடகா சட்டமன்றத்தில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “நீட் தேர்வானது கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைக்கும் நோக்கில் உள்ளது.

மேலும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வில் தொடர்ச்சியாக நடக்கும் குளறுபடிகளை தடுப்பதற்காக, National Medical Commission (Central act 30 of 2019) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகளே மருத்துவ படிப்பிற்கான தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் : விமர்சனம்!

டாக்டர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share