முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் இன்று (பிப்ரவரி 15) தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. karnataka hands over Jayalalitha gold jewellery
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு பெங்களூரு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்தநிலையில் கர்நாடகா அரசு கருவூலத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கும்படி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்காக உரிய பாதுகாப்புடன் தமிழக போலீசார் கர்நாடகத்துக்கு வர வேண்டும் என்றும் பிப்ரவரி 14, 15 தேதிகளில் நகைகளை மதிப்பீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்றும் இன்றும் நீதிபதி மோகன் முன்னிலையில் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, நகைகளை எண்ணி, மதிப்பிடும் பணி நடைபெற்றது. தமிழ்நாடு உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ். பி.விமலா ஆகியோரும் இந்த மதிப்பீட்டு பணியின் போது உடனிருந்தனர்.

அனைத்தும் சரி பார்த்து பட்டியல் தயார் செய்த நிலையில், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் 6 டிரங்க் பெட்டிகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவை லாக்கர் வசதி கொண்ட கன்டெய்னர் லாரியில் முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்படுகிறது.

இதுதொடர்பாக கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி, “வைரத்துடன் கூடிய தங்க நகைகள், ரூபி, ஒரு கிலோ தங்க கிரீடம், 1.2 கிலோ எடையுள்ள தங்க ஒட்டியாணம் , தங்க வாட்ச், தங்க பேனாக்கள், ஜெயலலிதாவின் உருவம் கொண்ட தங்க தட்டு என மொத்தம் 27 கிலோ எடைகொண்ட நகைகள்,

சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கும் 1586 ஏக்கர் நிலங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை உரிய பாதுகாப்புடன் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

சசிகலா ரூ.20 கோடியை அபராதமாக செலுத்தியுள்ளார். வழக்கிற்கான செலவாக கர்நாடக அரசு ரூ.7 கோடி கேட்டுள்ளது” என்று கூறியுள்ளார். karnataka hands over Jayalalitha gold jewellery