காவிரி நீரை திறந்து விடும் உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்துள்ள, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதே முதன்மையான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட நீரின் அளவை திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.
அதே நாளில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை 15 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழுவும் (CWRC) உத்தரவிட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று (அக்டோபர் 12) பேசிய கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் பேசுகையில்,
“காவிரி நீர் ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு 3,000 கனஅடி நீர் வழங்க உத்தரவிட்டுள்ளனர். எங்கள் அணைகளுக்கு இன்று 10,000 கனஅடி நீர்வரத்து உள்ளது.
அதனால் தமிழ்நாட்டிற்கு நீரை திறந்து விட முடியாது. உத்தரவு எதுவாக இருந்தாலும், கர்நாடக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கர்நாடக அணைகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை இங்கு அனுப்புமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் (CWMA) கோரிக்கை விடுத்துள்ளோம். இனி அவர்கள் தான் அதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்.
மேகதாது அணையை கட்டி, தமிழ்நாட்டின் பங்கான 177 டிஎம்சி தண்ணீரை கொடுக்க கர்நாடகா தயாராக உள்ளது.
ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதே முதன்மையானது என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கர்நாடகாவின் நான்கு அணைகளுக்கும் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நீர் வரத்து குறைவாக உள்ளது என்றும், தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிட முடியாது என்றும்,
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவுக்கு கர்நாடக அரசு இன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
