கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் மாநில அரசு தயாரித்த உரையை வாசிக்க மறுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசு தயாரித்து தரும் உரைகளை படிக்க மறுத்து வெளிநடப்பு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த ஆண்டும் தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.
இதே பாணியில் தற்போது கர்நாடகா மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டும் அம்மாநில சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். கர்நாடகா அரசு தயாரித்த உரையின் 3 வாக்கியங்களை மட்டும் படித்துவிட்டு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வெளிநடப்பு செய்தார். அப்போது அவரை முற்றுகையிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் என்ன பிரச்சனை?
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுடன் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். நடப்பாண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால் அரசு தயாரித்த உரை, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த உரையில் மத்திய அரசை விமர்சிக்கும் வாக்கியங்கள் இருப்பதால் தம்மால் வாசிக்க முடியாது; சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பேன் என தாவர்சந்த் கெலாட் முன்னரே அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா அமைச்சர்கள் நேற்று ஆளுநர் கெலாட்டை சந்தித்து பேசினர். அப்போது அரசு தயாரித்த உரையில் 11 முக்கிய அம்சங்களை நீக்க வலியுறுத்தினார் ஆளுநர்.
இந்த நிலையில் இன்று ஜனவரி 22-ந் தேதி காலை சட்டப்பேரவை கூடியதும், தாம் நீக்க சொன்ன வாக்கியங்களுடனேயே தாம் வாசிக்க வேண்டிய உரை இருந்ததால் அதை வாசிக்க மறுத்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் கெலாட்.
