ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தியுள்ளார்.
பெங்களூரு குண்டனஹல்லி பகுதியில் பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே செயல்பட்டு வருகிறது. இங்கு பொடி இட்லி மிகவும் பிரபலம். மற்ற உணவு வகைகளும் இயற்கை முறையில் தயாரித்து கொடுப்பதால், இந்த ஓட்டலுக்கென தனி வாடிக்கையாளர்கள் உண்டு. சினிமா பிரபலங்கள் இந்த ஓட்டலுக்கு அதிகம் செல்வார்கள்.
இந்நிலையில் இன்று மதியம் சுமார் 1 மணியளவில் வாடிக்கையாளர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் குழு மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் தடயவியல் ஆய்வகத்தின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.
முதலில் ஓட்டலில் இருந்த சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்றும் மர்ம பொருள் வெடித்திருக்கலாம் என்றும் இருவேறு தகவல்கள் வெளியாகின.
Trigger warning: CCTV footage from the Rameshwaram cafe in Brookfield Bengaluru. 9 people injured, including 3 cafe employees. @thenewsminute @dhanyarajendran @thekorahabraham pic.twitter.com/WbhLGlWDYZ
— Shivani Kava/ಶಿವಾನಿ (@kavashivani) March 1, 2024
இந்தநிலையில், உணவகத்தில் விபத்து ஏற்பட்ட போது, பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் வெடிவிபத்துக்குப் பின், புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் ஓட்டலுக்குள் ஒரு பெண் தரையில் கிடப்பதும், சிலர் அங்கும் இங்கும் ஓடுவதும் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து பெங்களுரூவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் சித்தராமையா,
“ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டுதான். வாடிக்கையாளர் ஒருவரின் பையிலிருந்து வெடிகுண்டு வெடித்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
இதை யார் வெடிக்கச் செய்தார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நெருங்கும் தேர்தல்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்!