கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 17 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவிற்கு சென்று கொண்டிருந்தது. வியாழனன்று அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த கண்டைனர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவரைத் தாண்டி எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து உடனடியாக தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
