இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள “ஷேர்ஷாஹ்” என்ற பாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இவர் தமிழில் பட்டியல், பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், ஆரம்பம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
1999ஆம் வருடம் நடைபெற்ற கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த கேப்டன் விக்ரம் பாத்ராவின் தியாகத்தைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 19, 1999இல் தன்னுடைய தலைமையில் Point 5140 என்ற பதட்டம் நிறைந்த இடத்தில் பாகிஸ்தான் படையை தோற்கடித்து இந்திய தேசியக் கொடியை கேப்டன் விக்ரம் பாத்ரா நாட்டினார். பின்னர் அவரே தன்னுடைய குழுவுடன் மேலும் பதட்டமான Point 4875 சென்று எதிரியுடன் 36 மணி நேரம் போர் புரிந்தார். இச்சண்டையில் அவருடைய குழுவைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தான் படை வீசிய வெடிகுண்டில் சிக்கிக் கடுமையான காயத்துக்கு உள்ளானார். உடனே அவரை காப்பாற்றும் முயற்சியில் கேப்டன் விக்ரம் ஈடுபட எதிரியின் தாக்குதலில் உயிர் இழந்தார். இச்சண்டையில் தன் நண்பரை காப்பாற்றியது மட்டுமல்லாது Point 4875யும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்கில் போரின் வெற்றிக்கு கேப்டன் விக்ரமின் சாகசம் முக்கிய பங்காற்றியது. கார்கில் போரில் இறக்கும் பொழுது விக்ரமின் வயது வெறும் 24 என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் படைக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கிய கேப்டன் விக்ரம் பாத்ராவிற்கு, அவரது சாகசத்தை பாராட்டி இந்திய அரசு “பரம் வீர் சக்ரா” விருது அறிவித்து கௌரவித்தது. தற்போது பாலிவுட்டில் நிலவி வரும் நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் திரைப்படங்களின் வரிசையில், விஷ்ணு வர்தன் இயக்கும் “ஷேர்ஷாஹ்”வும் இணைந்துள்ளது.
இவர் கடைசியாக 2௦15ல் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் யட்சன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். வார பத்திரிக்கை ஒன்றில் தொடர்கதையாக வந்த ஒரு கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதன் பிறகு பிங்கர்டிப் என்ற வெப்-சீரீஸ் ஜீ5 சேனலுக்காக தயாரித்து இருந்தார். பொங்கல் அன்று வெளியான பர்ஸ்ட் லுக்குடன் ஜூலை 3 ரிலீஸ் என்ற தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
An ode to the brave journey of the Kargil War hero.
Presenting @SidMalhotra in the UNTOLD TRUE STORY of Captain Vikram Batra (PVC) in #Shershaah. Releasing 3rd July, 2020.@advani_kiara @vishnu_dir @karanjohar @apoorvamehta18 @b_shabbir pic.twitter.com/1fdUZSG3Ij
— Dharma Productions (@DharmaMovies) January 16, 2020
ஷேர்ஷாஹ் படத்தை பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தயாரிக்கிறார். ஸ்டுடென்ட் நம்பர் 1, ஹஸ்சே தொ பஹ்சீ, ஏக் வில்லன், கபூர் அண்ட் சன்ஸ் போன்ற வெற்றிப்படங்களில் தோன்றிய சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்கிறார்.,”
