காரைக்காலில் 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த பால மணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு, கலை நிகழ்ச்சியில் சிறந்து விளங்குபவராகவும் இருந்தார்.
இதனால் பொறாமை கொண்ட சக மாணவியின் தாயான சகாயமேரி, பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் இருந்த சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சிறுவன் பாலமணிகண்டன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதையடுத்து அந்த மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 3 மாதமாக புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகாயராணி விக்டோரியா மீது, காரைக்கால் போலீசார் இன்று(டிசம்பர் 24) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ள அந்த குற்றப்பத்திரிக்கையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் சகாயராணி சிறுவனுக்கு குளிர்பானம் கொடுத்த சி.சி.டி.வி. காட்சிகள், சிறுவனுக்கு கொடுப்பதற்காக எலி மருந்து வாங்கியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் சிறுவனுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளும் சமர்பிக்கப்பட்டன.
சகாயராணி விக்டோரியாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விஷ மருந்தும், உடற்கூராய்வின்போது மாணவனின் உடலில் இருந்த விஷமும் ஒத்துப்போவதாக போலீசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்த 3 மாதத்தில் காரைக்கால் போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
“விஜய் தான் சூப்பர்ஸ்டார்னு சொன்னப்போ கலைஞரே ஆச்சரியப்பட்டார்! ஆனா..!” – சரத்குமார்
