காரைக்கால்: மீனவர்கள் படகில் ரோந்து செல்லும் கடலோரக் காவல்படை!

Published On:

| By admin

காரைக்கால் மாவட்டத்தில் ரோந்து படகுகள் இல்லாததால் கடலோரக் காவல்படையினர் மீனவர்கள் படகில் ரோந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு கடலோரப் பகுதி உள்ளது. இதில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு கோட்டுச்சேரி, மண்டபத்தூர் உள்ளிட்ட 11 மீனவக் கிராமங்களை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடலோரப் பாதுகாப்புக்காக கடலோர காவல் நிலையம் தொடங்கப்பட்டு இரண்டு அதிநவீன ரோந்து படகுகளை புதுச்சேரி காவல் துறை வழங்கியது.
படகுகளை பராமரிப்பு செய்ய உரிய தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாத காரணத்தால் பராமரிப்பின்றி இரண்டு ரோந்து படகுகளும் ஓர் ஆண்டுக்கு மேலாக பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் வழி குற்றச்சம்பவங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் இயலாமல் கடலோரக்காவல் படை போலீஸார் தவித்து வருகின்றனர்.
அண்டை மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கடல் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் புதுச்சேரி மற்றும் தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் காரைக்கால் மாவட்டத்தில் கண்காணிப்பதற்கு போதிய படகு உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாததால் மீனவ கிராமங்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் மீனவர்கள் படகை இரவல் வாங்கி 15 நாட்களுக்கு ஒருமுறையே ரோந்து செல்லும் அவலநிலை தொடர்கிறது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, “ரோந்து படகு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பழுது நீக்கிய நிறுவனத்துக்கு ரூ.16 லட்சம் பாக்கியை தற்போது வரை அரசு தரவில்லை. இந்த நிலையில் மீண்டும் பழுதாகி முடங்கியுள்ளது. எனவே இதை சீர்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதுவரை மீனவர்களின் படகுகளில் செல்ல வேண்டியுள்ளது” என்கின்றனர்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share