இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் பெயர் மாற்றியதற்கு கபில் தேவ் கடுமையாக எதிர்வினையாற்றினார்.
இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (ஜூன் 20) மதியம் 3.30 மணிக்கு லீட்ஸில் தொடங்குகிறது. 2007க்குப் பிறகு இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடரை வெல்லும் நோக்கில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
இதற்கிடையே இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான கோப்பையை மறுபெயரிட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) எடுத்த முடிவு செய்தது.
அதன்படி இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து நடத்தும் டெஸ்ட் தொடரின் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பட்டோடி டிராபியை, ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி என்று மறுபெயரிட்டது.
இரு நாட்டைச் சேர்ந்த ஒரு ஜாம்பான்களின் பெயரை கோப்பைக்கு சூட்டியதை பலர் வரவேற்றனர்.
எனினும் டிராபியின் பெயர் மாற்றியதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் “விசித்திரமானது” என்று அழைத்தார்.
டன்பிரிட்ஜ் வெல்ஸில் 1983 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்ததை நினைவுகூரும் வகையில் த்ரீ சிக்ஸ்டி ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வின் போது பேசிய கபில், இந்த முடிவுக்கு கடுமையாக எதிர்வினையாற்றினார்.
“இது கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது… இதுவும் நடக்குமா? என தோன்றுகிறது. ஆனால் அது பரவாயில்லை. நாளின் இறுதியில், எந்த வித்தியாசமும் இல்லை. கிரிக்கெட் கிரிக்கெட்தான்” என்று அவர் கூறினார்.
இந்த பெயர் மாற்ற முடிவு பரவலான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், இங்கிலாந்து வாரியம் பட்டோடி பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது முன்னாள் இந்திய கேப்டனின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தனிப்பட்ட கௌரவமாகும். இது தொடரை வென்ற கேப்டனுக்கு வழங்கப்படும்.
புகழ்பெற்ற மன்சூர் அலி கான் பட்டோடியின் நினைவாக பெயரிடப்பட்ட பட்டோடி டிராபி, 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. பட்டோடி என்ற பெயர் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் நிலப்பரப்புடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. இப்திகார் அலி கான் பட்டோடி மற்றும் அவரது மகன் மன்சூரும் இந்தியாவின் கேப்டனாக இருந்தனர் மற்றும் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
