முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் கூட்டணி அமைத்தார் ரஜினிகாந்த். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஏ.ஆர் ரகுமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ‘லால் சலாம்’ படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்தும், கபில்தேவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இன்று(மே18) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
