சிஆர்பிஎஃப் வீரர் மீது கன்வார் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kanwar yatris arrested for assaulting CRPF jawan
சிவ பக்தர்களின் வருடாந்திர யாத்திரையான கன்வார் யாத்திரை கடந்த ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூலை 23 ஆம் தேதி நிறைவடைகிறது.
பக்தர்கள் வெறுங்காலுடன் நடந்து சென்று கங்கையிலிருந்து புனித நீரை குடங்களில் சுமந்து கோயில்களுக்கு கொண்டுச் செல்வது இந்த யாத்திரையின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் பிரம்மபுத்ரா மெயில் ரயிலில் செல்வதற்காக காவி உடை அணிந்த கன்வாரியாக்கள் இன்று (ஜூலை 19) வந்தனர்.
அப்போது அவர்களுக்கும், அங்கிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (CRPF) சேர்ந்த வீரருக்கும் இடையே டிக்கெட் வாங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கன்வாரியாக்கள் சிஆர்பிஎஃப் வீரரை கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த மிர்சாபூர் ரயில்நிலைய இன்ஸ்பெக்டர் தோமர் தலைமையிலான ஆர்.பி.எஃப் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 7 சிவபக்தர்களையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சிஆர்பிஎஃப் வீரரை கன்வாரியாக்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.