ராஜன் குறை
நாடெங்கும் குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பெருகி வருகின்றன. ஷாஹின் பாக் கொடுத்த எழுச்சி, நாடெங்கும் அதுபோன்ற தர்ணாக்களை உருவாக்கி வருகின்றது. அநேகமாக பல இடங்களில் இந்த போராட்டங்கள் தன்னெழுச்சியான அணி சேர்க்கைகளை உருவாக்குகின்றன. சிறிய அமைப்புகள் சில முன்முயற்சி எடுத்தாலும் உடனே பலரும் அதில் இணைந்து கொள்கிறார்கள். முக்கிய அரசியல் கட்சிகளில் இருப்பவர்களும் கலந்து கொள்கிறார்கள், ஆதரவு தருகிறார்கள். இஸ்லாமியர்கள் இயல்பாகவே இந்த போராட்டங்களில் அதிகம் பங்கெடுத்தாலும், இந்த போராட்டங்களின் சிறப்பம்சமே பல்வேறு தரப்பினரும், இந்துக்களும் இதில் கணிசமாக பங்கேற்பதுதான். இந்த போராட்டங்களின் ஒரே கோரிக்கை குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள், அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், சிந்தனையாளர்கள் என பலரும் இந்த சட்டம் மத ரீதியான பாகுபாட்டை உருவாக்குகிறது என்று கூறியுள்ளார்கள். போராடும் மக்களும் அதைத்தான் கூறுகிறார்கள். சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் அரசிடம் இந்த சட்டம் யாரையும் பாதிக்காது என்பதை விளக்கச் சொல்லி அறிவுறுத்தியது. அரசும் அதை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை யாரும் நம்பவில்லை. ஏனெனில் இந்த சட்டமே ஒரு பாதிப்புதான். அது மக்களை மத ரீதியாக பிரிக்கிறது.
தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் மட்டும் சில பேர் மீண்டும், மீண்டும் இந்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு, முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிவருகிறார்கள். பாகிஸ்தான், ஆஃகானிஸ்தான், பங்களா தேஷ் ஆகிய மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர் அல்லாத ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு ஐந்தாண்டுகளில் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிசெய்கிறது. அதற்கும் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன தொடர்பு என்று மீண்டும், மீண்டும் சிலர் கேட்கிறார்கள்.
இதற்கு பதில் கூறும்போது NRC என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு, NPR என்ற தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுடன் இந்த சி.ஏ.ஏ. சட்டத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். இது ஏனென்றால் இந்த இரண்டிலும் ஒருவரது மூதாதையர்களைக் குறித்த தகவல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை கேட்பதும் அதை தர இயலாதவர்களை குடிமக்கள் அல்ல என்று வரையறுக்கும் சாத்தியமும் இருக்கிறது.
இதற்கு முன்மாதிரியாக அஸ்ஸாமில் நடைபெற்ற குடிமக்கள் பதிவேடு நடைமுறை விளங்குகிறது. அங்கே தேவையான ஆவணங்கள் இல்லாததால் பத்தொன்பது இலட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் இந்துக்கள் பத்து முதல் பதிமூன்று இலட்சம் பேர் என்றும், முஸ்லீம்கள் ஆறு முதல் ஒன்பது இலட்சம் பேர் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் பொருட்டே, குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது இந்த சட்டத்தின் பின்னணி. முஸ்லீம்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இலட்சக்கணக்கான மக்களை எப்படி தடுப்பு முகாமில் வைக்க முடியுமென்பது தெரியாவிட்டாலும், அப்படித்தான் பேசப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்கவேண்டும்?
தமிழகத்தில் போராட்டம் பரவலாக வலுப்பெற்றிருக்கும் நிலையில் எதற்காக இந்த போராட்டம் என்பதைக் குறித்து அனைவரும் தெளிவாக விளக்கக் கற்பது அவசியம். இரண்டு விதமான காரணங்களை சொல்லலாம்; ஒன்று தேசிய குடியுரிமை பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுடன் இணைந்து இந்த சட்டம் வாசிக்கப்பட வேண்டும் என்பது. அதைவிட முக்கியமானது அதனளவிலேயே இந்த சட்டம் கடுமையாக எதிர்க்கப் பட வேண்டும் என்பது.
மத அடையாளத்தையும் குடியுரிமையையும் எந்த காரணத்திற்காகவும் இணைப்பது இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது என்பதால்தான் இது அரசியல் நிர்ணய சட்டத்தை காக்கும் போராட்டம் என்று கூறப்படுகிறது.
அப்படி சொல்லும்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறதே அவர்கள் சொல்லட்டும் என்று சிலர் கூறுவார்கள். உச்ச நீதிமன்றம் சட்டம் செல்லாது என்று சொல்லிவிட்டால் ஏன் மக்கள் போராடப் போகிறார்கள்? அவ்வளவு எளிதாக தீர்ப்பு சொல்லப்பட மாட்டாது என்பதாலும், அதுவரை காத்திருக்க முடியாது என்பதாலும்தான் அரசே முன்வந்து சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என மக்கள் போராடுகிறார்கள். இது முழுக்க, முழுக்க ஜனநாயக உரிமைகள் சார்ந்தது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றமும் ஷாஹின்பாக் மக்களின் போராடுவதற்கான உரிமையை அங்கீகரித்துள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ளும்படி மட்டும் கோரப்பட்டுள்ளார்கள். அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருவரை நியமித்துள்ளார்கள்.
எடப்பாடியின் அறியாமையும், ஆவேசமும்!
தமிழகத்தில் போராட்டம் துவங்கியபோது காவல்துறை கடுமையான ஒடுக்குமுறையை கையாள முயற்சித்தது. டெல்லியல் நடந்ததுபோல அந்த முயற்சியே போராட்டத்திற்கு உரமாக மாறியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ஷாஹின்பாக் போன்ற நிரந்த தர்ணா போராட்டம் தொடங்கியுள்ளது. அது மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடியின் சட்டமன்ற பேச்சு அறியாமையா, ஆணவமா அல்லது இரண்டும் கலந்ததா என்று புரியாத வண்ணம் அமைந்துள்ளது. தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை காட்டச் சொல்லி ஆவேசமாக சவால் விட்டார். பாதிப்பு என்றால் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. குடியுரிமை பறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறாரா, அல்லது அவரது போலீஸாரால் தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறாரா என்று புரியவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் மத ரீதியாக குடியுரிமை வழங்கவும், மறுக்கவும் வகை செய்கிறது என்னும்போது, அதில் இஸ்லாம் மட்டும் விலக்கப்பட்டுள்ளது என்னும்போது, அது தொடர்பாக பேசம் பாரதீய ஜனதா கட்சியினர் இந்தியா இந்துக்கள் நாடு என்று பேசும் போது, சிறுபான்மையினர் மனரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பது வெளிப்படையானது அல்லவா. எனவே, இந்த சட்டமே பெரிய பாதிப்புதான். தனியாக வேறு பாதிப்புகள் தேவையில்லை.
இது மறைமுகமாக இந்தியாவை இந்துக்களின் தாயகம் என வலியுறுத்துகிறது. மூன்று நாடுகளை இஸ்லாமிய நாடுகள் என்றும், அங்கே பிற மதத்தினர் துன்புறுத்தப் படுகிறார்கள் என்றும் கூறுகிறது. மத ரீதியான துன்புறுத்தலை தவிர, அரசியல் ரீதியான துன்புறுத்தலை அங்கீகரிக்க மறுக்கிறது. உதாரணமாக இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வகைசெய்ய மறுக்கிறது. ஏனெனில் இலங்கை இஸ்லாமிய நாடு அல்ல என்பதும், அங்கே நிகழ்ந்தது மத ரீதியான துன்புறுத்தல் இல்லை என்பதும் காரணம். இப்படி தெளிவாக இஸ்லாமிய மதத்தையும், முஸ்லீம்களையும் மட்டும் அந்நியப்படுத்தும் சட்டம் அந்த மக்களிடையே அச்சத்தை விதைப்பது நியாயம்தானே? இந்தியாவின் மதச்சார்பின்மையை காக்க விரும்பும் அரசியல் சக்திகள் ஒன்று திரள்வது இயல்புதானே? காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், சி.பி.ஐ.(எம்) தலைவர் யெச்சூரி ஆகியோர் நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கத்திற்கு குரல் கொடுத்துள்ளார்கள்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இது எதுவுமே தெரியாதது போல பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை காட்டுங்கள் என்று கேட்பது திட்டமிட்ட அறியாமை. போராடும் மக்களை, கட்சிகளை, சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் சிந்தனையாளர்களை அவர் அவமதிக்கிறார். இது போன்ற நாடகங்கள் அருவருக்கத்தக்க அரசியலை வளர்க்கின்றன. இதற்கு பாராளுமன்றத்தில் செய்தது போல குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை ஆதரித்து பேசலாம். ஆனால் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள், அவர்கள் உணர்வுகள் என்ன என்பதை புரிந்துகொண்டு பேச வேண்டும். ஒரு முதலமைச்சரின் பொறுப்பு கட்சித்தலைவருக்கு உள்ளதைவிட பன்மடங்கு அதிகமானது. ஏனெனில் போராடும் மக்களுக்கும் அவர்தான் முதல்வர். அவர்களுடன் அவர் பேச வேண்டும்.
ஈழத்தமிழர் குடியுரிமை
தமிழக அரசில் உள்ளவர்கள் எதற்காக ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதைக் குறித்து பேசும்போது அதை இரட்டைக் குடியுரிமை என்று கூறுகிறார்கள் என்று புரியவில்லை. இந்திய அரசு அவர்களுக்கு முதலில் குடியுரிமை வழங்க வகைசெய்யட்டும் என்பதுதானே கோரிக்கையாக இருக்க முடியும். அவர்களில் யாரெல்லாம் இந்திய குடிமக்களாக விரும்புகிறார்களோ அவர்கள் விண்ணப்பிக்கப் போகிறார்கள். இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து அகதிகளாக இருந்துவிட்டுப் போகிறார்கள். இந்தியக் குடிமக்களாக மாறியவர்கள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கே குடியுரிமை கிடைத்தால் அங்கே செல்லட்டும். அப்படி ஒரு நிலை வரும்போது ஒற்றைக் குடியுரிமையா, இரட்டைக் குடியுரிமையா என்று பேசலாம். இன்றைய உடனடித் தேவை இங்கேயே பதினைந்து ஆண்டுகளாக, இருபது ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்வதுதான். அதற்கு விண்ணப்பிக்கிறார்களா, இல்லையா என்பது அவர்கள் முடிவு. இதில் தொடர்ந்து இரட்டைக் குடியுரிமை என்று பேசுவது தேவையற்றது. பிரச்சினையை சிக்கலாக்குவது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அ.இ.அ.தி.மு.க கட்சி அண்ணா பெயரையும், திராவிட என்ற வார்த்தையையும் கட்சிப் பெயரிலிருந்து நீக்குவதே நியாமாகும். தினகரன் கட்சிப் பெயரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பதே ஆளும் கட்சிக்கும் பொருத்தமான பெயர்.
கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com,”