கேஜிஎஃப் படத்திற்கு பிறகு கன்னட மொழியில் வெளியாகி உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி அடைந்த படம் காந்தாரா. நடிகர் ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் இந்த படத்தையும் இயக்கி இருந்தார்.
ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும், அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம். மேலும், காந்தாரா முதல் பாகத்தின் prequel (முன்னுரை) ஆக காந்தாரா 2 தயாராக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
காந்தாரா 2 படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
