ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 171ஆவது படமாக கூலி உருவாகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் பிற மொழி முன்னணி திரை கலைஞர்கள் வில்லன், கேமியோ கதாபாத்திரங்களில் நடித்தால் மட்டுமே போட்ட முதலை எடுக்க வணிக ரீதியான வசூல் கிடைக்கும் என்ற சூழல் தமிழ் சினிமாவில் உள்ளது.
அந்த அடிப்படையில் கூலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தெலுங்கு திரை நட்சத்திரம் நாகர்ஜுனாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் மறுத்து விட்டதால், தற்போது கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய இளம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமில்லாதவர் உபேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
1995ல் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஓம் படத்தின் மூலம் அகில இந்திய அளவில் பிரபலமானவர் உபேந்திரா. கன்னட சினிமாவை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றதில் அப்படத்தை இயக்கி நடித்த உபேந்திராவுக்கு பெரும் பங்கு உண்டு.
அன்றைய காலகட்டத்தில் இந்த படத்தில் நடிக்க, சிறையில் இருந்த நிழல் உலக தாதாக்களையும், நிஜ ரவுடி, கொலைகாரர்களையும், ஜாமினில் எடுத்து இந்த படத்தில் நடிக்க வைத்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் உபேந்திரா.
இன்று வரை இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் பட்ட படங்களில் அதிக பார்வைகளை பெற்ற படம் ஓம், அது மட்டுமல்ல கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் அதிகமான முறை மறு வெளியீடு செய்யப்பட்ட கன்னட படமாக ஓம் உள்ளது.
இந்த படத்தின் கதை ஒரு நிழல் உலக தாதாவின் உண்மையான வாழ்க்கை தான் என தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் சமீபத்தில் கூறியிருக்கிறார் உபேந்திரா.
கன்னட சினிமாவின் போக்கை 25 வருடங்களுக்கு முன்பே மாற்றிய இயக்குனர் உபேந்திரா, தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் இணைந்திருப்பது அகில இந்திய அளவில் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், வணிக மதிப்பு அதிகரிக்கவும் காரணமாக அமையும் என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
72வது பிறந்தநாள் : விஜயகாந்த் சிலையை கண்கலங்க திறந்து வைத்தார் பிரேமலதா