அச்சாரம் போட்ட கலைஞர்… அப்டேட் செய்யும்  ஸ்டாலின்… தொடங்கியது கணித் தமிழ் மாநாடு!

Published On:

| By Kavi

பன்னாட்டு கணித் தமிழ் மாநாடு இன்று (பிப்ரவரி 8) சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. அந்த வகையில் மொழியையும், தகவல் தொழில் நுட்பத்தையும் ஒருங்கிணைப்பதிலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடே முன்னோடியாக விளங்குகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் நடத்தப்படும் கணித்தமிழ் மாநாடு இன்று (பிப்ரவரி 8) சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ளது. இந்த மாநாடு 8,9,10
தேதிகளில் நடைபெறுகிறது.

இன்று மாலை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளோடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்  இதே நாளில் முன்னாள் முதல்வர் கலைஞர் 1999ஆம் ஆண்டு தமிழிணையம் 99 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். அப்போதைய ஒன்றிய அரசின் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் இந்த மாநாட்டில் முக்கியப் பங்கு வகித்தார்.

அதை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு கணித்தமிழ் மாநாடு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில்  நடைபெறுகிறது.

1996 இல்  இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் தகவல் தொழில் நுட்ப கொள்கை அறிவிக்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக 1999 பிப்ரவரி 8  நடத்தப்பட்ட உலகத் தமிழ் இணைய மாநாட்டில்தான் கணியினின் தமிழ் பயன்பாட்டில்,  விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டது. அதுவரை விசைப் பலகையில் ஏற்பட்டு வந்த குழப்பத்திற்கு இம்மாநாடு முற்றுப்புள்ளி வைத்தது.

இணையத்தில் கலைஞர் அனுப்பிய தமிழ் வாழ்த்து செய்தியே முதல் வாழ்த்து செய்தியாக இன்றுவரை நிலைத்திருக்கிறது.

தமிழ் எழுத்துருக்குறியீட்டுத் தரப்பாடு,  தமிழ் விசைப்பலகைத் தரப்பாடு; கணிப்பொறி, பல்லூடகம் மற்றும் இணையம், கணிப்பொறியின் பிற பயன்பாடுகள் ஆகியவற்றில் தமிழ்மொழியின் இன்றைய பயன்பாட்டு நிலை ஆகியவை 99 மாநாட்டின் பொருண்மைகளாக அமைந்தன.

இந்த மாநாட்டில்தான்  தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு கல்வியாளர்கள், மொழி நிபுணர்கள், கணிப்பொறி வல்லுநர்கள், சொற்செயலியை உருவாக்கியவர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோர்கள் கலந்து கொண்டனர்.

கலைஞர் நடத்திய இந்த மாநாட்டை தொடர்ந்து தமிழ் இணையக் கல்விக் கழகம் தொடங்கப்பட்டது. கழக அரசு என்றால் தமிழ் இணையக் கல்விக் கழக அரசும் என்று பொருள்படும் அளவுக்கு… உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் பணிகளை இந்த கழகம் செய்து வருகிறது.

இந்த பணிகளின் அடுத்த பாய்ச்சலாக  தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் பிப்ரவரி 8ஆம் தேதி 10ஆம் தேதி வரை கணித்தமிழ் மாநாடு நடைபெறுகிறது. தமிழ் இணையக் கல்விக் கழகத் தலைவரும் நிதித்துறை முதன்மை செயலாளருமான உதயச்சந்திரன் தலைமையில் இந்த மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் உலக மாநாடுகளின் மொழி அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் குழு விவாதங்கள், காட்சி அரங்குகள், ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பு,  நிரலாக்கப்போட்டி செயல்முறை விளக்கங்கள், வல்லுநர்களின் உரைகள், மற்றும் பயிற்சி பட்டறைகள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பப் பாதையில் தமிழின் பயணம் சிறப்புற நிகழ வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், 50க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் கலந்துகொள்கின்றனர். 40க்கும் மேற்பட்ட அமர்வுகள் மற்றும் குழு விவாதங்கள் நடைபெறவுள்ளன. 35 ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்படவுள்ளன.

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் மொழியியல் அறிஞர்கள்,

கூகுள். மைக்ரோசாஃப்ட், லிங்க்ட்இன், டெக் மகேந்திரா, AI சிங்கப்பூர், ஸோஹோ உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பங்கள், புத்தம்புது புலவர்களுக்காக, டிஜிட்டல் உலகில் தமிழ் வாசிப்பு : நேற்று இன்று நாளை உள்ளிட்ட் பல்வேறு தலைப்புகளில் 50க்கும் மேற்பட்ட வல்லுநர் உரைகளும் 40 க்கும் மேற்பட்ட அமர்வுகள் & குழு விவாதங்களும் இடம்பெறுகின்றன.

மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவை மாநாட்டில் கலந்துகொள்வோர் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

தமிழ் அன்னையை அப்டேட் செய்யவும்,  உலகத் தமிழர்கள் நெஞ்சில் எல்லாம் அவளை அப்லோடு செய்யவும் கணித் தமிழ் மாநாடு களமாடி வெல்லும் என்பது நிச்சயம்!*

இம்மாநாடு தொடர்பான முழு விவரங்களை https://www.kanitamil.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்வோம்.

யார் யார் எந்தெந்த தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த க்யூர் கோடை ஸ்கேன் செய்க…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share