திமுக “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மேற்கு மண்டல மகளிர் மாநாடு இன்று (டிசம்பர் 29) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது.
திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி தலைமையில் நடைபெறும் இன்றைய மாநாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
150 ஏக்கர் நில பரப்பளவில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனிமொழி இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் புறப்பட்டார்.
அவருடன் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி சோமு உள்ளிட்ட எம்பிக்களும் பயணித்தனர்.
திமுக பெண் எம்பிக்கள் பயணித்த அதே விமானத்தில், முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனும் பயணித்தார்.
அப்போது நான்கு பேரும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் பக்கத்தில், ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.
அரசியலில் இரு துருவமாக செயல்பட்டாலும், ஓரிடத்தில் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், ”தமிழகத்தில் எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஒரு அவல ஆட்சியை நடத்திக் கொண்டு “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற விளம்பரப் பதாகைகளைத் தூக்கிப் பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
