இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டை விமர்சித்த பவன் கல்யாணின் பழைய பதிவுகளை பகிர்ந்து கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். kanimozhi strong reply to pawan kalyan
இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை திமுக அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. இது நாடு முழுவதும் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
ஏன் இந்தியில் டப்பிங்?
இந்த சூழலில் நேற்று நடைபெற்ற ஜனசேனா கட்சியின் நிறுவன நாளில் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு தமிழ் உட்பட பல மொழிகள் தேவை என்றும் இந்தி வேண்டாம் என்றால், நிதி ஆதாயத்திற்காக ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் பவன் கல்யாணின் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கு முன்பு பவன் கல்யாண் இந்தி திணிப்புக்கு எதிராக பேசிய கருத்துகளையும், பாஜக கூட்டணியில் துணை முதல்வரான பிறகு தற்போது பேசியதையும் ஒப்பிட்டு கனிமொழி விமர்சித்துள்ளார்.

மொழி திணிப்பது – தேச விரோத முயற்சி! kanimozhi strong reply to pawan kalyan
பவன் கல்யாண் தனது பழைய பதிவில் ’கோ பேக் இந்தி’ என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்தியை நாட்டின் அலுவல் மொழியாக மாற்றுவது குறித்து இந்திய அரசியலமைப்பு சபையில் நீண்ட விவாதம் நடைபெற்றது. வேறு எந்த தலைப்பும் இவ்வளவு அதிகமாக விவாதிக்கப்படவில்லை. இந்தி பேசாத பல மாநிலங்களில், குறிப்பாக தெற்கில் நடந்த போராட்டங்கள் காரணமாக இந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்திய தேசியம் என்பதை நாங்கள் பெருமையுடன் அறிவிக்கிறோம். ஆனால் இன்று, அத்தகைய வெறுப்பை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவரும் முயற்சியாக இந்தி திணிப்பு உள்ளது.
வங்காள மக்கள் மீது உருது மொழியை திணிக்கும் முயற்சிதான் எதிர்ப்பு இயக்கங்களுக்கும் அதைத் தொடர்ந்து வங்காளதேசம் உருவாவதற்கும் வழிவகுத்தது. இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் திணிப்பது தேசிய ஒருமைப்பாட்டை மீறுவதாகும். அத்தகைய முயற்சி தேச விரோத முயற்சியாகவும் இருக்கலாம்.
உள்ளூர் மொழிகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பது, அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பது, அவற்றை வரலாற்றின் போக்கில் ஒருங்கிணைக்கும் வகையில் பாகுபாடு காட்டுவது தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தானது. ஒருவர் மீது மொழியை திணிக்க முயற்சிப்பது ஆபத்தான சமிக்ஞையை அனுப்பும்.
பிற மொழிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது அந்தந்த மொழிகள் மேலோங்குவதற்கான சூழ்நிலையை மாநில அளவில் உருவாக்க முடிந்தால், இந்தி இயல்பாகவே இணைப்பு மொழியாக வளரும். இல்லையெனில், இந்தியைத் திணிக்க முயற்சித்தால், அது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் வெடித்த மொழி வெறுப்பை மீண்டும் தூண்டுவது போலாகும். வட இந்திய அரசியல் தலைமை நமது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும்.” என பவன் கல்யாண் அதில் குறிப்பிட்டுள்ளார்.
திணிக்காதீர்கள் என்பது வெறுப்பு அல்ல! – பிரகாஷ் ராஜ்
அதேபோன்று பவன்கல்யாணுக்கு பதிலளித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட பதிவில், “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்” என்று சொல்வது, வேறொரு மொழியை வெறுப்பது அல்ல, அது “நமது தாய்மொழியையும் நமது தாயையும் சுயமரியாதையுடன் பாதுகாப்பது” என்று யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.