சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் மக்களவை உறுப்பினர் கனிமொழி.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக பிரச்சாரம் துவங்கியுள்ளது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதியைத் தொடர்ந்து, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, முதல்வரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனது பிரச்சாரத்தை இன்று (நவம்பர் 29) துவங்கினார்.
கோவை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் எடப்பாடி பகுதிக்குச் சென்ற கனிமொழிக்கு, அங்கு திரண்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பொதுமக்களின் வரவேற்பை ஏற்ற அவர், கொங்கணாபுரத்திலுள்ள திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார். பெண்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய கனிமொழி, “வீட்டில் இருக்கும் பெண்கள் சம்பாதிக்கவும், ஆண்களுக்கு நிகராக பேசக்கூடிய நிலைமையையும் உருவாக்கித் தந்தது கலைஞர் தொடங்கிய மகளிர் சுய உதவிக் குழு திட்டம். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அதனை விரிவாக்கி சுழல் நிதியை உருவாக்கித் தந்தார். ஆனால், இப்போதைய ஆட்சி ஆட்சியாகவே இல்லை” என்று சாடினார்.

ஜெயலலிதா பெயரை சொல்லிக்கொண்டு நடைபெறும் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பில்லை என்ற கனிமொழி, “பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பது கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மூலம் அனைத்து கல்லூரிகளையும் ஒரே வளாகத்துக்குள் கொண்டு வரப்படப்போகிறது.
அப்படி வந்தால் கிராமங்களில் இருந்து நான்கு பேருந்துகளைப் பிடித்து பெண்களை கல்லூரிக்கு அனுப்பிவைப்பார்களா? அதிமுக ஆட்சியில் தைரியமாக அனுப்ப முடியுமா? அப்படி அனுப்புவதற்கு எத்தனை பெற்றோர்கள் அனுமதிப்பார்கள். ஆனால் இதுகுறித்து அதிமுக அரசு எதுவும் பேசவில்லை” என்றார்.
அது தங்களைக் காப்பாற்றிக்கொண்டால் மட்டும் போதும் என நினைப்பதாகக் கூறியவர், விவசாயிகள், பெண்கள் என அனைவருக்கும் எதிரானது அதிமுக அரசு என்று குற்றம்சாட்டினார். ஸ்டாலின் குரலாக அவரின் செய்திகளை உங்களுக்கு எப்படி சொல்கிறேனோ அதுபோலவே உங்களின் கோரிக்கைகளையும் அவரிடம் எடுத்துச்சென்று தீர்வுகாணுவேன் என்று உறுதியளித்தார். விரைவில் தமிழகம் எப்படி மீட்டெடுக்கப்பட போகிறதோ அதுபோல சுய உதவிக்குழுக்களும் மீட்டெடுக்கப்படும் என்றார் கனிமொழி.
**எழில்**,”
