அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கிறேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பார்த்து, கனிமொழி எம்.பி உருக்கமாக பேசினார்.
திமுகவின் ஐந்து துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராகக் கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டார்.
இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கனிமொழி, “ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்ட போது பெரியாருக்கும், நம்முடைய தலைவர்களுக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளி பேரறிஞர் அண்ணாவின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
அந்த மேடையில் அவர் பேசும் போது, நாம் இயக்கத்தை நடத்தக் கூடிய விதம் என்பது தந்தை பெரியார் அவர்களை ஆறுதல் படுத்தக் கூடிய ஒன்றாக, அவர் போற்றக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று சூளுரைத்தார்.
அதுபோன்று திமுக ஆட்சி 1967க்கு வந்த போது , சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியது, தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது என தொடர்ந்து பெரியார் பாராட்டக் கூடிய ஆட்சியாக உருவாக்கிக் காட்டினார்.
அதுபோன்று இந்தி எதிர்ப்பு, சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமை என தன்னுடைய கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல்,
பெரியார், அண்ணாவின் கனவுகளை, இந்த இயக்கத்தின் லட்சியங்களை நிறைவேற்றிக் காட்டியவர் கலைஞர்.
அவருக்குப் பிறகு திமுகவால் தமிழகத்துக்கு வெற்றிடம் உருவாகிவிடும் என்றார்கள். பல பேர் வெற்றிடம் உருவாக வேண்டும் என்று விரும்பினார்கள்.
நம்முடைய பரம்பரை பகைவர்கள், நம்முடைய கொள்கைகளுக்கு எதிராக ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
ஆனால் அவற்றை எல்லாம் தகர்த்து எறியக் கூடிய வகையில் ஆழி பேரலையாக எழுந்து நின்று காட்டினார் மு.க.ஸ்டாலின்.
அவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த இயக்கத்தைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
அரசியல் வெற்றி மட்டுமல்ல, தொடர்ந்து எந்த இடத்திலும் நமது கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்.
நம்முடைய பிள்ளைகள் படிக்கக் கூடிய வாய்ப்பை பெற்று 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் புதியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து மீண்டும் நம்முடைய பெண் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறார்கள். அதற்காகத் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.
எனவே மு.க.ஸ்டாலின் தலைமையில் நம்முடைய கொள்கைக்கான போராட்டத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணா, அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கிறேன். உங்களது போராட்டம் அனைத்திலும் அணி வகுக்க தயாராக இருக்கிறேன் என்று உருக்கமாகப் பேசினார்.
பிரியா
‘கட்டளையிடுங்கள்… 2024 தேர்தலிலும் வெற்றி உறுதி’ : உதயநிதி
ஸ்டாலினை பார்த்து கலைஞரும் பேராசிரியரும் சொன்னது இதுதான் : எ.வ.வேலு