பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார் எடப்பாடி என கனிமொழி விமர்சித்துள்ளார். kanimozhi slapped edappadi for alliance with bjp
தமிழகத்திற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமித் ஷா சென்னையில் இன்று (ஏப்ரல் 11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “2026 தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்.டி.ஏ கூட்டணி அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதியானதை அடுத்து அதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அறிவாலயத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி பேசுகையில், ”ஒருபோதும் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது, பாஜக உடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி இருந்த அதே மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக – பாஜக தேர்தல் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
பல்வேறு சமயங்களில் பாஜக கொண்டு வரும் மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து வருவதாக கூறும் எடப்பாடி பழனிசாமி, அதே மேடையில் மவுனமாக இருந்து கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை பார்க்க முடிந்தது. பேசக்கூடிய உரிமை இல்லாத சூழ்நிலையில் கூட்டணியை ஏற்றுள்ளார்.
இது அவருடைய கட்சிக்கு மட்டுமல்ல. அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார் எடப்பாடி.
பாஜகவுடன் கூட்டணியை அறிவிக்கும் நிர்பந்தத்திற்கு அதிமுகவினர் ஆளாக்கப்பட்டுள்ளனர். அண்ணா, ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவரோடு கூட்டணியை அமைத்திருக்கிறார்.
கூட்டணியில் இருந்து விலகினாலும் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என முதலமைச்சர் தொடர்ச்சியாக கூறி வந்தது உண்மை என்பது இன்று அம்பலமாகியுள்ளது.
இந்தியை திணித்ததை தவிர பாஜக என்ன செய்துள்ளது? காசி தமிழ்ச் சங்கத்தால் தமிழ் எப்படி வளர்ந்தது? பிரதமர், நிதியமைச்சர் திருக்குறள் சொல்வதை நாம் தமிழ் வளர்ச்சிக்கு செய்த தொண்டாக ஏற்க முடியாது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதா, மும்மொழி கொள்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? எனவே மக்களை திசைதிருப்பும் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை” என கனிமொழி தெரிவித்துள்ளார்.