டிலிமிட்டேஷன்… “யாருக்கு வலிக்குமோ அவர்கள்தான் கேட்க முடியும்” – கனிமொழி காட்டம்!

Published On:

| By Aara

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மக்களவை தொகுதி மறு சீரமைப்பில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னையில் 7 மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசினார் திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. who suffer they speak


அப்போது அவர்,

“மக்களவை தொகுதிகள் மறு சீரமைப்பு விவகாரத்தில், எந்த விதமான தெளிவையும் ஏற்படுத்தாமல் குழப்பத்தை அதிகமாக்கும் வகையில் இருப்பதால்தான் தெளிவான பதிலை ஒன்றிய அரசு தர வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்துகிறார்.

நாங்கள் எங்கள் உரிமைகளைக் கேட்கும்போது அது மற்றவர்களை எதிர்ப்பதாக ஆகாது. இன்னும் சொல்லப் போனால் நாங்கள் இங்கே கூடியிருப்பது, இங்கே வராதவர்களின் உரிமைகளுக்காகவும் சேர்த்து போராடிப் பாதுகாப்பதற்காகத்தான்.

சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் இருக்கும் பாரபட்சமான மக்களவைத் தொகுதி மறு வரையறையைதான் நாங்கள் எதிர்க்கிறோம். இன்றைய சட்ட ரீதியான அமைப்பின்படி மறுவரையறை என்பது மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்த முடியும்.

அப்படியென்றால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு எதிரானதாக அது அமையும். சிறந்த நிர்வாகத்தைக் கொடுத்த மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது.

கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாட்டினை ஏற்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் வைத்த மாநிலங்களை அதற்காக தண்டிப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தண்டிக்கப்பட கூடாது. இதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

இந்த கூட்டத்துக்கு வந்திருந்த தலைவர்களிடம் எக்ஸ்பர்ட் கமிட்டிக்கு அவர்கள் சார்பாக சிலரை பரிந்துரைக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் விரைவில் ஒரு குழு அமைக்கப்படும்.

அடுத்த கட்ட கூட்டத்தை ஹைதராபாத்தில் நடந்த வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை வைத்தார். அதை முதலமைச்சர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.

இதன்படி கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் நடக்கும். இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத கட்சிகளின் பிரதிநிதிகள் கூட அந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

யாருக்கு வலிக்குமோ அவர்கள்தான் அழ முடியும். எந்தெந்த மாநிலங்கள் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படுமோ அந்த மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய கருத்துகளை இன்று முன் வைத்திருக்கிறார்கள்.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் இன்றைய கூட்டத்தில் அவர்களால் கலந்துகொள்ள இயலவில்லை என தெரிவித்தனர். தமிழ்நாடு பாஜக மட்டும் இல்லை இந்த தேசிய அளவிலே இருக்கக்கூடிய பாஜக தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக தமிழ்நாட்டு உரிமைகளுக்காக எதிரான கருத்துக்களை தான் அவர்கள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

நம்முடைய ரெப்ரசன்டேட்ஸ் குறையும் போது தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயங்களை அங்கு இருக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கம் கருத்தில் கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்தார். who suffer they speak

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share