த.வெ.க தலைவர் விஜய்யின் விமர்சனத்திற்கு, யார் அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று என கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 13) பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, ஆளும் திமுக மீது கடும் விமர்சனங்களை வைத்தார். யார் என்ன சொன்னாலும், அண்ணா சொன்ன பஞ்ச் தான். வாழ்க வசவாளர்கள். நம்மை மோசமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக அரசையும், திமுக அரசையும் கேள்வி கேட்க வந்துள்ளேன்.
முக்கால்வாசி வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல், எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம் என்று கதை விடுகிறீர்களே.. மை டியர் சிஎம் சார்? ரீல்ஸ் வேற, ரியாலிட்டி வேற என்று சொல்லி விட்டு, நீங்களே இப்படி ரீல்ஸ் விடுறீங்களே. அப்படி விட்டதில் பாதி ரீல் அறுந்தும் போய்விட்டது. முந்தா நேற்று வரையில் ஒன்றிய பிரதமர், இன்று இந்திய பிரதமர். பிளேட்டை மாற்றி பேசுவதில் நம்ம முதல்வர் ரொம்ப புத்திசாலி. இப்போது புரிகிறதா மக்களே, மறைமுக உறவுக்காரர்கள் என்று நாம் ஏன் சொல்கிறோம் என்று.” என அடுக்கடுக்கான விமர்சனங்களை விஜய் முன் வைத்தார்.
இந்நிலையில் இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் அமைந்திருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அண்ணா தமிழகத்தின் சிந்தனை போக்கை அரசியலை மாற்றி அமைத்த ஆளுமையாக திகழ்ந்தார். அவருடைய கருத்துகளின் வழி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியே பேரறிஞர் அண்ணாவை போற்றக்கூடிய ஆட்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
த.வெ.க தலைவர் விஜய், தொடர்ந்து திமுக அரசு மீது விமர்சனம் வைப்பது தொடர்பான கேள்விக்கு
”யார் அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று. எப்போதும் எங்களை தான் விமர்சிப்பார்கள்” என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
