யார் யாருக்கு அடிமை என்பது எடப்பாடி பழனிசாமிக்கே நன்றாகத் தெரியும் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பட்ஜெட் குறித்த கேள்விக்கு, “இந்த முறை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறதோ இல்லையோ, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களின் பெயர்களை நிச்சயமாக நாம் பலமுறை கேட்கலாம். வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிஜேபி ஆட்சியில் எதையும் நாம் எதிர்பார்க்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு” என்றார்.
பிரேமலதாவுடன் போனில் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கூட்டணி சம்பந்தமாக நான் அவரிடம் எதுவும் பேசவில்லை” என்றார்.
திமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டதா என்ற கேள்விக்கு, “உறுதியாக இருந்தால் நிச்சயமாக முதலமைச்சர் அறிவிப்பார்” என்றார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி குறித்த கேள்விக்கு, “இப்போதுதான் மக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இனிமேல் எதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும்” என்றார்.
ராகுல் காந்தி – கனிமொழி சந்திப்பை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “பார்லிமெண்ட் டெல்லியில் உள்ளது. நான் ராகுல் காந்தியை அங்கு பார்க்காமல் வேறு எங்கு பார்க்க முடியும்? பார்லிமெண்ட் ஆரம்பித்து விட்டது. கூட்டணியில் இருக்கக்கூடிய ஒரு தலைவரை நாடாளுமன்றம் நடக்கக்கூடிய அந்த நேரத்தில் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அதோடு இல்லாமல், நான் அவரை சந்திக்கச் செல்லும்போது என்னுடைய முகத்தை எல்லாம் மூடிக்கொண்டு செல்லவில்லை. நேரடியாகத்தான் போய்விட்டு வந்தேன்” என்றார்.
திமுக தான் டெல்லி அடிமைகள் என்று எடப்பாடி விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “யார் யாருக்கு அடிமை என்பது அவருக்கே நன்றாகத் தெரியும்” எனத் தெரிவித்தார்.
