காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று (பிப்ரவரி 21) உலகத் தாய்மொழி தினம். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நம் உயிருக்கு நேராம்,சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்… தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுடன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அந்த போஸ்டரின் மேல் பகுதியில் திருவள்ளுவர் காவி நிற உடையில் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த வெள்ளை உடை வள்ளுவர் படத்திற்குப் பதிலாக, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பயன்படுத்தும் காவி உடை படத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த போஸ்டரை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார்.
இந்நிலையில் எடப்பாடிக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, “பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமியை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்” என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நீக்கிய அந்த போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார்.
