”திமுக தலைவர்களை எந்த விதத்திலும் அச்சுறுத்த முடியாது. இதனை திமுக தைரியமாக எதிர்கொள்ளும்” என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ள அவரது வீடு முன்பு திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் அமலாக்கத்துறைக்கு எதிராக அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் அரசு விழாவில் பங்கேற்ற பின்பு திமுக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ”பாஜக கட்சி அரசு ஒருபுறம் தேர்தல் கமிஷனை தனது கையில்
வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு SIR போன்ற பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை கொண்டு தொடர்ந்து தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய சோதனை. 4
இதனை திராவிட முன்னேற்ற கழகம் தைரியமாக எதிர்கொள்ளும். நமது அமைச்சர் எத்தனையோ சிக்கல்களை கடந்து திமுகவுடன் உறுதுணையோடு நிற்கக் கூடியவர். அதனால் எந்த பயமுறுத்தலாலும் எங்களுடைய திமுக தலைவர்களை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்தார்.
