தர்மேந்திர பிரதானை சந்தித்தது உண்மை… ஆனால்! – நாடாளுமன்றத்தில் கனிமொழி

Published On:

| By Selvam

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவதில் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று தெரிவித்தோம் என மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி இன்று (மார்ச் 10) கூறினார். kanimozhi clarifies dharmendra pradhan

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம் ஸ்ரீ திட்டத்தை முதலில் தமிழகத்தில் அமல்படுத்துவோம் என்று உறுதியளித்துவிட்டு பின்னர் திமுக எம்.பி-க்கள் பின்வாங்கியதாக குற்றம்சாட்டினார். மேலும், திமுக எம்.பி-க்களை நாகரீகமற்றவர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்று கடுமையாக பேசினார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து பேசிய கனிமொழி, “தமிழக எம்.பி-க்களையும், தமிழக மக்களையும் நாகரீகமற்றவர்கள் என்று தர்மேந்திர பிரதான் கூறியது என்னை மிகவும் காயப்படுத்தியது. தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி நானும் தமிழக எம்.பி-க்களும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தோம்.

அப்போதே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. தேசிய கல்வி கொள்கை மும்மொழியை ஆதரிக்கிறது. ஆனால், தமிழகத்தில் இரு மொழி கொள்கையை பின்பற்றப்படும் என்று மத்திய அமைச்சரிடம் தெளிவாக விளக்கினோம். இதுதொடர்பாக பிரதமர் மோடி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி, தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்” என்றார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான், ” நான் பேசிய வார்த்தைகள் திமுக எம்.பி-க்களை காயப்படுத்தியிருந்தால் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். தேசிய கல்வி கொள்கை குறித்து நான் பேசியதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தார். kanimozhi clarifies dharmendra pradhan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share