காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் ’தங்க தேர்’ கனவை நிறைவேற்றிய திமுக அரசு!

Published On:

| By Mathi

Kanchi Mutt

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு இன்று டிசம்பர் 8-ந் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோவிலின் குடமுழுக்கு நிகழ்வுகள் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.

முன்னதாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத் தேர் வழங்கப்பட்டது. இந்த தங்கத் தேர், ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டது. மொத்தம் 23 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தேரின் உயரம் 23 அடி; நீளம் 15 அடி; அகலம் 13 அடி.

ADVERTISEMENT

இந்த தங்கதேர் வெள்ளோட்டத்துக்கான யாகசாலை பூஜைகளை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி தொடங்கி வைத்தார். இத்தேர் முறைப்படி இன்று டிசம்பர் 8-ந் தேதி ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்திடம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ஒப்படைக்கப்பட்டது; இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இத்தேரை கோவில் நிர்வாகம் சார்பாக பெற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

மதுரை திருப்பரங்குன்றத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டது திமுக அரசு; இந்துக்களுக்கு விரோதமாக திமுக அரசு செயல்படுகிறது என இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் இத்தகைய ’ஆன்மீக’ நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளன.

இது பற்றி காஞ்சி ஏகாம்பரநாத கோவில் பக்தர்களிடம் பேசிய போது, 69-வது பீடாதிபதி பெரியவா ஜெயேந்திரர் இருக்கும் போதே, ”தங்கத்தேர் செஞ்சு கொடுங்க” என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அவரும் ரூ.36 கோடி செலவில் தங்கத் தேர் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். இதற்காகவே ‘ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை’ ஒன்றையும் அவர் தொடங்கினார். இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை கிளியரன்ஸ் கொடுக்காமலேயே இருந்தது.

ADVERTISEMENT

அதுக்குள்ள பெரியவா முக்தி அடைஞ்சுட்டார் (மறைந்துவிட்டார்).. அதனால தற்போதைய சங்கராச்சாரியார் (விஜயேந்திரர்) இந்த தங்க தேரை செய்து முடித்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணியை ஏற்றுக் கொண்டார். இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடமும் பேசியிருந்தார்.

இதற்கிடையிலதான் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த டிசம்பர் 8-ந் தேதி முடிவு செய்யப்பட்டது. அன்றைய தேதியிலேயே இந்த தங்க தேரை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் சங்கராச்சாரியார் முடிவு செய்திருந்தார்.

இந்த சூழலில்தான் திருப்பரங்குன்றம் பிரச்சனை பெரிதாக வெடித்தது .. திமுக ஆட்சியை கடுமையாக விமர்சிக்கிறாங்க.. இந்துக்களுக்கு எதிரான அரசுன்னு சொல்றாங்க.

ஆனால் தங்கத்தேரை ஏகாம்பர நாதர் கோவில் சார்பாக பெற்றுக் கொள்ள அமைச்சர் சேகர்பாபு ஒப்புக் கொண்டு தகவல் அனுப்பினார். அதுக்கும் மேல தங்கத் தேர் வெள்ளோட்டத்துக்கான யாகசாலை பூஜைகளை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்து தொடங்கி வைச்சாங்க..ஓரிக்கை மகா பெரியவா மணி மண்டபத்தில்தான் யாகசாலை பூஜையும் நடந்தது.. இன்னைக்கு குடமுழுக்கும் சிறப்பா நடந்திருக்கு.. தங்கத் தேரும் கோவிலிடம் ஒப்படைக்கப்பட்டு பெரியவா ஜெயேந்திரரின் கனவை நிறைவேற்றி வைத்துவிட்டது திமுக அரசு” என நெகிழ்கின்றனர்.

இதுபற்றி காஞ்சி சங்கர மடத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது, ”திமுக கவர்மெண்ட் வந்ததுல இருந்து எங்களுக்கு சப்போர்ட்டாதான் இருக்கு.. 2021 பிப்ரவரியில் அதிமுக கவர்மெண்ட் நடந்துச்சு.. அப்போ, விஜயேந்திரர்- ராமேஸ்வரம் கோவில் கருவறையில் பூஜை செய்தார்; அது பெரிய பிரச்சனையாகிடுச்சு. சிருங்கேரி மடாதிபதிகள்தான் கருவறைக்குள் பூஜை செய்யனும்னு சொன்னாங்க.. அதுதான் பிரச்சனையாக இருந்துச்சு..

போன வருஷம் காசி யாத்திரையை நிறைவு செஞ்சுட்டு விஜயேந்திர சுவாமிகள், ராமேஸ்வரம் போனார்.. அப்ப கூட அனுமதி கொடுப்பாங்களா? சர்ச்சையாகுமான்னு நிலைமை இருந்துச்சு.. சபரீசன் உள்ளிட்டோர் எல்லாம் சிருங்கேரி மடத்துக்கு ஆதரவா இருந்தாங்க.. இந்த பிரச்சனையை ஆடிட்டர் குருமூர்த்தி முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு போனார்.. அப்ப, முதல்வர் ஸ்டாலின், ”எங்கோ இருந்து வரும் சிருங்கேரி மடத்துக்காரங்களை அனுமதிக்கிறோம்.. நம்ம ஊர் சங்கராச்சாரியார்களை அனுமதிச்சா என்னன்னு?” சொல்லி பிரச்சனையே இல்லாம ராமேஸ்வரம் கருவறைக்குள் விஜயேந்திர சுவாமிகள் பூஜை செய்ய உதவினார்.

தங்க தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி அன்று கூட, சுவாமிகள் (விஜயேந்திரர்) அமைச்சர் காந்தியின் ஊரில் ஒரு கோவில் கட்டுமானம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசியிருந்தார்.. அப்பவே அதிகாரிகளை கூப்பிட்டு சுவாமிகள் என்ன சொல்றாரோ அதை செஞ்சு கொடுங்கன்னு அமைச்சர் சேகர்பாபு ஆர்டர் போட்டார். இப்ப ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகமும் சிறப்பா நடந்துடுச்சு.. பெரியவா ஜெயேந்திரர் கனவையும் நிறைவேற்றி, தங்கத் தேரை ஏகாம்பரநாதர் கோவிலிடம் ஒப்படைக்க சுமூகமான முறையில திமுக அரசுதான் உதவி இருக்கு” என்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share