விமர்சனம் : இந்தியன் – 2

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கிளாசிக் படங்களில் ஒன்று ‘இந்தியன்’.

குறிப்பாக அந்தப் படத்தின் மைய கதாபாத்திரமான ’சேனாபதி’ கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றே சொல்லலாம். அந்த கதாபாத்திரத்தின் நியாயங்கள், தத்துவம், மனபலம், வித்தைகள் என அனைத்தும் சரியாக வடிவமைக்கப்பட்டதாக இருக்கும்.

இப்படி சேனாபதியின் கிளாசிக் தனங்கள் தாண்டி, மற்றொரு கதாபாத்திரமான சந்துரு பாத்திரத்தின் காதல், காமெடி மற்றும் சேனாபதியின் ஆக்‌ஷனுக்கு காரணமான கஸ்தூரியின் மறைவு, குடும்ப செண்டிமெண்ட் என ஒரு பக்கா கமர்சியல் படமாகவும் இருந்தது ‘இந்தியன்’ .

இப்படிப்பட்ட ஒரு கிளாசிக் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு கையில் எடுப்பதே ஒரு விஷப் பரிட்சையாகத் தெரிந்தாலும், விபத்து, பட்ஜெட் நெருக்கடி, அடுத்தடுத்த நடிகர்களின் மரணம் என  பத்தாத குறைக்கு டிரைலர், பாடல்கள்( ’பாரா’ பாடலை தவிர) எதுவும் மக்களின் வரவேற்பை பெறவில்லை.

பல்வேறு இன்னல்களைத் தாண்டி இந்தப் படத்தை வெளியிட்ட சங்கரின் உழைப்பு பாராட்டிற்குரியதே.

ஒன்லைன்

சித்தார்த் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ‘பார்கிங் டாக்ஸ்’ என்கிற ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். அந்த சேனலில் அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல் செயல்களை காணொலிகள் மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள்.

ஆனால், இவர்களின் சேனலால் எந்த வித மாற்றமும் நிகழப்போவதில்லை எனத் தெரிந்ததும், ’இந்த அநியாயத்தை எல்லாம் தட்டிக் கேட்க ’இந்தியன் தாத்தா’ தான் வரணும்’ என ஒரு ஹாஷ்டேகை உலக அளவில் டிரெண்ட் செய்கின்றனர். இதற்கு பிறகு இந்தியன் தாத்தா இந்த பிரச்சனைகளை எப்படி தீர்த்துவைக்கிறார் என்பதே இந்தியன் 2 திரைப்படத்தின் கதை.

அனுபவ பகிர்தல்

டிரைலர் தந்த ஏமாற்றம் மனதில் நீடிக்க, ஒரு வித கலவையான எதிர்பார்ப்புடன் தான் ‘இந்தியன் – 2’ திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினோம்.

தொடக்கத்தில் இருந்த ‘அந்நியன்’ திரைப்படத்தின் காட்சியை நியாபகப்படுத்தும் காட்சியைத் தொடர்ந்து அடுத்தடுத்து ’ஜெண்டில் மேன், ‘முதல்வன்’ , ‘ஐ’என பல சங்கர் படங்களை நாம் பார்த்து பழகிய பல காட்சிகள், விஷயங்களை ஞாபகப்படுத்துவதாய் விரிந்தது ’இந்தியன் – 2’

படத்தின் முதல் 30 நிமிடங்களுக்கு கமல்ஹாசன் எண்ட்ரி இல்லை. சரி அவர் வந்த பிறகு படத்தின் கதை சூடு பிடிக்கும் என நினைத்த நமக்கு ஏமாற்றம் மட்டுமே காத்திருந்தது.

நாம் கிளாசிக்காக பார்த்த ’இந்தியன் தாத்தா’ அந்த வயதிற்கேற்ற முதிர்ச்சியுடன், உடல்மொழியுடன் இரு விரல் வைத்தே எதிரிகளை காலி செய்பவர். ஆகையால் தான் அவரை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் ’இந்தியன் – 2’ வில் காட்டப்படும் தாத்தா ஏறத்தாழ ஒரு சூப்பர் ஹூமன்.

24 ரீல்களுக்கு பாதி சென்னையை ஓடியே கடப்பவர். கொஞ்சம் விட்டால் அவரை மார்வெல்ஸின் அவெஞ்சர்ஸ் உடனே சேர்த்திருப்பர் போலும்.

படமெங்கும் லஞ்சம், ஊழல் என ஒரே பாட்டை நிப்பாட்டாமல் பாடியது மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கர் படத்தில் வழக்கமாக இருக்கும் செண்டிமெண்ட், காமெடி, புதிய தகவல் என எதுவும் இந்தப் படத்தில் இல்லாமல் இருந்தது ஆச்சர்யம் என்பதை விட ஒரு வித அதிர்ச்சியே.

கமலின் நடிப்புக்கு தீனி போதும் அளவிற்கான கதை இது அல்ல. எனினும், அவர் தனக்கு தந்த வேலையை மிக சிறப்பாகவே செய்து முடித்துள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் ஒரு இடத்தில் அழுதுகொண்டே நடந்து வரும் காட்சியில் தான் கமல் என்பதை நிரூபித்துள்ளார்.

எந்த வித ஆர்வமும் ஏற்படுத்தாமல் முதல் பாதி முடிய, அதையே மேலும் நமக்கு பழக்கப்படுத்தியது இரண்டாம் பாதி.

விரிவான விமர்சனம்

ஒரு நல்ல கமர்சியல் படத்திற்கு வில்லன் கதாபாத்திரம் சரியாக அமைந்தால் தான் அந்தப் படம் சுவாரஸ்யம் ஆகும். அல்லது படத்தின் நாயக கதாபாத்திரம் செய்யும் செயல்களுக்கான காரணம் மிக வலுவாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாதது தான் ’இந்தியன் – 2’ திரைப்படத்தின் அடிப்படை பிரச்சனை.

’இந்தியன் தாத்தா’ தொடர்ச்சியாக கார்ப்பரேட் முதலைகளை கொல்கிறார். ஆனால், அதற்கான வலுவான காரணம் எதுவும் நமக்கு காட்டப்படவில்லை மாறாக கமல் வாயாலேயே சொல்லப்படுகிறது.

ஆகையால் அந்த கொலைக் காட்சியில் நம்மால் ஈடுபட்டுக்கொள்ள முடியவில்லை. ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் கொல்லப்படுகிறது என்றால் நாம் அதற்காக பரிதாபப்பட வேண்டும். அல்லது கொலை செய்பவரின் பக்கமாவது நிற்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் நடக்கும் தொடர்கொலைகளில் எந்தக் காட்சியிலும் நம்மால் அப்படி பொருத்திப் பார்க்கவே முடியவில்லை.

பத்தாத குறைக்கு ஒவ்வொரு கொலைக்கு முன்னரும் அதற்கு பயன்படுத்தப்படும் வர்மத்தின் பெயர் என்ன என பாடம் எடுக்கிறார் கமல். இதில் வித்தியாசமாக ஒரு கொலை சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவரின் எச்சிலை வைத்து கமல் கோலம் போடுவதாக எடுக்கப்பட்ட காட்சியின் நோக்கம் என்னவென்றே புரியவில்லை.

கமல், சித்தார்த் தவிர்த்து ஏனைய துணை நடிகர்களின் எந்த கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. படத்தின் ஆரம்ப காட்சியில் துப்புரவு தொழிலாளியை ஒரு கதாபாத்திரம் அழைக்கும் விதம் தொடர்ந்து,  பல்வேறு அரசியல் தவறுகள் தற்காலத்திலாவது சங்கர் தன் எழுத்தில் மாற்றிக்கொள்ள வேண்டியவை.

அனிருத்தின் இசை குறித்த பல்வேறு விமர்சனங்கள் இந்தப் படத்தின் பாடல்களின் வெளியீட்டில் இருந்து வந்தது. பின்னணி இசையில் காட்சிகளில் இருக்கும் அதே தொய்வு இசையிலும் இருந்தது. ஆனால் சில இடங்களில் வரும் ஏ.ஆர்.ரகுமானின் பழைய ’இந்தியன்’ பிஜிஎம் மாஸ். விவேக், மனோபாலா, நெடுமுடிவேணு போன்ற மறைந்த நடிகர்களின் காட்சிகள் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எந்த இடத்திலும் பெரிய துறுத்தலாகத் தெரியவில்லை.

சுத்தி சுத்தி எல்லாவற்றிற்கும் ஊழல் ,லஞ்சம் தான் காரணம் என சொல்லிவிட்டு அதற்கு தீர்வு என்ன? என்பதை கடுகளவும் காட்ட முனையாதது படத்தின் பெரிய பிரச்சனை. ஒரு ஊழல் எப்படி நடக்கிறது என்பதை காட்டுவதிலாவது ஒரு புதுமை வேண்டும் அல்லவா..? இந்தியன் முதல் பாகத்தில் அது மிக நேர்த்தியாக காட்டப்பட்டிருக்கும். 24 ரீல்களுக்கு மேல் ஓடும் ஒரு நீண்ட சேசிங் காட்சி ஒன்று படத்தின் கிளைமாக்ஸில் உள்ளது அதில் ஏறத்தாழ பாதி சென்னையை ஓடியே கடக்கிறார் இந்தியன் தாத்தா. அந்த காட்சி முழுக்க படு அபத்தமாகவே உள்ளது. ஆனால் பீட்டர் ஹெயினின் சண்டை வடிவமைப்பு மிகச் சிறப்பு.

படத்தின் தேவை இல்லாத காட்சிகள் பல உள்ளது அதை நிச்சயம் எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் வெட்டி எடுத்திருக்கலாம். ஆனால், மூன்றாம் பாதிக்காக இதை நீட்டி எடுத்துள்ளனராம்? ஏறத்தாழ இதுவும் ஒரு வித ஊழல் கணக்கில் வரும் தானே? கிலோ அல்ல டன் கணக்கில் உள்ளது இந்தப் படத்தின் லாஜிக் மீறல்கள். மொத்தத்தில் நாம் அனைவரும் பார்த்து ரசித்த ஒரு கிளாசிக் கதாபாத்திரத்தை மிக சுமாராக காட்டியுள்ள ஒரு படம் தான் ‘இந்தியன் -2’ . படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்திற்கான டிரைலர் காட்டப்படுகிறது. அது சிறப்பாகவும் உள்ளது என்கிற சில விமர்சனங்களை பார்க்க முடிகிறது. ஆனால், நிஜமாகவே அது சிறப்பாக உள்ளதா அல்லது அது ‘இந்தியன் – 2’ நமக்கு அளித்த இரு கோடுகள் எஃபெக்ட்டா என்பதை அறிந்ததாரோ?

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி தேர்தல்… வாக்காளர்களுக்கு தேங்க்ஸ் சொன்ன ஸ்டாலின்

” சீமானுக்கு வாய்க்கொழுப்பு” – சேகர்பாபு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share